சென்னை: தமிழக ஊராட்சிப் பகுதிகளில் குப்பை சேகரிப்பு குறித்து விழிப்புணர்வுப் பாடல்களை ஒலிபரப்பத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
‘தூய்மை இந்தியா’ திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, ஊராட்சிகள் வீடு வீடாகச் சென்று பேட்டரிகளில் இயங்கும் வாகனங்கள் மூலம் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
எனினும், ஏராளமானோருக்கு குப்பைகளைப் பிரிக்கும் விதம் குறித்து தெரிந்திருக்கவில்லை. எனவே, திடக்கழிவுகளை அவரவர் வீடுகளில் மட்கும், மட்காத குப்பை எனத் தரம்பிரித்து அப்புறப்படுத்த வலியுறுத்தும் வகையில், குப்பை சேகரிக்கும் வாகனம் விழிப்புணர்வுப் பாடல்களை ஒலிபரப்பி வருகின்றனர்.
இத்திட்டத்தை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி தொடங்கி வைத்தார். தமிழக ஊராட்சிகளில் 1.25 கோடி ஊரக குடியிருப்புகள் உள்ளன. ஏறக்குறைய 84,651 பணியாளர்கள் அப்பகுதிகளில் குப்பைகளைச் சேகரிக்கின்றனர்.
இதற்காக 8,315 பேட்டரியால் இயங்கும் வாகனங்கள், 1,291 டிராக்டர்கள், 372 பிற வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இவற்றைப் பயன்படுத்தி மாநிலம் முழுவதும் உள்ள 12,525 ஊராட்சிகளிலும் விழிப்புணர்வுப் பாடல்கள் ஒலிபரப்பப்படுவதாக அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

