மறைந்த தாயின் நினைவாக மணி மண்டபம் கட்டிய மூன்று மகன்கள்; சிறிய தாஜ்மகால் என உருக்கம்

2 mins read
80efa5fe-34bb-4b0c-970a-008b70d2966d
மணிமண்டபம், அதற்குள் வைக்கப்பட்டுள்ள சிலையுடன் ராஜாத்தியின் மகன்கள். - படம்: ஊடகம்

ராமநாதபுரம்: இறந்த தாயின் நினைவாக மகன்கள் மூவரும் சேர்ந்து கட்டியுள்ள மணி மண்டபத்தின் திறப்பு விழா பலரை நெகிழ வைத்தது.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த முத்து என்பவரின் மனைவியான 55 வயது ராஜாத்தி என்பவர் உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு ஜனவரி 26ஆம் தேதியன்று காலமானார்.

இத்தம்பதியருக்கு ரவி ராவுஜி, ஹரி ராவுஜி, சுதன் ராவுஜி என மூன்று மகன்களும் மூன்று மகள்களும் உள்ளனர். சிறிய வீட்டில் ஜோதிடம் பார்க்கும் தொழிலைச் செய்து வந்தார் முத்து.

இந்நிலையில், தாயை இழந்த துக்கத்தில் மூழ்கிய மூன்று மகன்களும் தங்கள் வீட்டுக்கு அருகே உள்ள ஒரு தெருவில் புதிதாக ஒரு வீடு கட்டி அதன் முன்பு ராஜாத்தியின் முழு உருவச்சிலையை வைத்து மணிமண்டபம் கட்ட தீர்மானித்தனர்.

பலரும் இந்த முடிவைப் பாராட்டியதை அடுத்து, தங்கள் தாயார் ராஜாத்தி இறந்த முதலாம் ஆண்டு நினைவு தினத்துக்கு முன்பே இந்த மணிமண்டபத்தை கட்டி முடித்துள்ளனர்.

இதன் திறப்பு விழாவில் தமிழகச் சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், திமுக எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு ராஜாத்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இனி ஆண்டுதோறும் தங்கள் தாயாரின் நினைவு நாளில் ஆதரவற்றோருக்கு உதவிகள் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் இன்றைய இளையர்கள் பெற்றோரை மதித்து நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் ராஜாத்தியின் மூத்த மகன் ரவி ராவுஜி தெரிவித்துள்ளார்.

“வயதான காலத்தில் பெற்றோரைக் கைவிடுவது தவறு. தனது காதலின் நினைவாக தாஜ்மகாலைக் கட்டினார் ஷாஜகான். எங்கள் தாயின் நினைவாக நாங்கள் இந்த சிறிய தாஜ்மகாலைக் கட்டியுள்ளோம்,” என ரவி ராவுஜியும் அவரது சகோதரர்களும் கூறினர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்