திருமணங்களை இணையம் வழியாகப் பதிவுசெய்யும் வசதி விரைவில் அறிமுகம்

1 mins read
c29c4f05-128b-4a1c-bd12-a80ad4ec0f03
இணையவழித் திருமணப் பதிவு வசதி மூலம் புதுமணத் தம்பதியினரின் அலைச்சல் மிச்சமாகும் என்றும் மோசடித் திருமணங்கள் தடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. - மாதிரிப்படம்: இணையம்

சென்னை: மணமக்களே தங்கள் திருமணத்தை இணையத்தில் நேரடியாகப் பதிவுசெய்ய உதவும் திட்டத்தைத் தமிழக அரசு விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

அதற்கேதுவாக, பதிவுத்துறையின் மென்பொருளை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2009ஆம் ஆண்டு தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி, திருமணம் முடிந்து 150 நாள்களுக்குள் பதிவுசெய்துகொள்ள வேண்டும். அப்படி 150 நாள்களுக்குள் பதிவுசெய்துகொள்ளாதோர் பின் எப்போதுமே தங்கள் திருமணத்தைப் பதிவுசெய்ய இயலாது.

இந்நிலையில், பதிவுத்துறையில் திருமணச் சான்றிதழ் பெறுவதில் புதுமணத் தம்பதியர் பல சிக்கல்களை எதிர்நோக்குவதாகச் சொல்லப்படுகிறது. திருமணப் பதிவிற்கு ரூ.200 கட்டணம் செலுத்தினால் போதும் என்ற நிலையில், ரூ.10,000 லஞ்சம் கேட்பதாகச் சொல்லப்படுகிறது.

இதனையடுத்து, முறைகேடுகளைக் களையும் நோக்கில், திருமணப் பதிவுகளைப் பொதுமக்களே நேரடியாக இணையம் வழியாகப் பதிவுசெய்யும் நடைமுறையைத் தமிழக அரசு கொண்டுவர உள்ளது.

புதிய முறையின்கீழ், புதுமணத் தம்பதியர் பத்திரப் பதிவு அலுவலகத்திற்குச் செல்லத் தேவையில்லை. பத்திர எழுத்தர்களின் உதவியின்றி, தாங்களே நேரடியாக வீட்டிலிருந்து பதிவுசெய்துகொள்ளலாம். அதற்கான கட்டணத்தையும் இணையம் மூலமாகவே செலுத்தி விடலாம்.

ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்தால் திருமணச் சான்றிதழும் உடனடியாக வழங்கப்பட்டுவிடும்.

இதற்காக, பத்திரப் பதிவுத்துறையின் தற்போதைய ஸ்டார்-2 மேம்படுத்தப்பட்டு, விரைவில் ஸ்டார்-3 மென்பொருள் அறிமுகப்படுத்தப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இணையவழித் திருமணப்பதிவு வசதி மூலம் புதுமணத் தம்பதியினரின் அலைச்சல் மிச்சமாகும் என்றும் மோசடித் திருமணங்கள் தடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்