தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குருவிகள் பல விதம், கடத்தல்கள் பல ரகம்

5 mins read
531a28c2-367c-4e4b-b524-9150b1a0d98c
வேலையின்றித் தவிப்போர், பொருளியல் ரீதியில் நொடித்துப் போனோர் என, சமூகத்தின் குறிப்பிட்ட அடுக்குகளைச் சேர்ந்தவர்கள்தான் கடத்தல் கும்பலின் முதல் குறி. - கோப்புப்படம்: ஊடகம்
multi-img1 of 4

மஞ்சள் உலோகமான தங்கம் எந்த அளவுக்கு அழகானதோ, அதைவிட அதிக ஆபத்தானது. ‘மஞ்சள் பிசாசு’ எனக் குறிப்பிடப்படும் தங்கம், உலகில் அதிகம் கடத்தப்படும் பொருள்களில் ஒன்று.

இந்தியாவில் ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் மதிப்பிலான, பல கிலோ கடத்தல் தங்கம் பிடிபடுகிறது. ‘அடேங்கப்பா’ என மலைத்துப் போவதைவிட, இந்தப் பெரும் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி கைதாகி, சிறையில் வாடும் அப்பாவிக் குருவிகளின் நிலைகுறித்து ‘அடடா’ எனக் கவலைப்பட வேண்டியதே இன்றைய தேவையாக உள்ளது.

யார் இந்தக் குருவிகள், கடத்தலுக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு என்பதை உங்களில் பலர், பல திரைப்படங்களைப் பார்த்து அறிந்து வைத்திருப்பீர்கள். ‘குருவி’ என்ற பெயரில் ஒரு திரைப்படம்கூட வெளியாகியுள்ளது.

தங்கம், போதைப் பொருள்கள், விலை உயர்ந்த மின்னணுப் பொருள்கள் ஆகியவற்றை ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு கடத்துபவர்களைத்தான் ‘குருவி’ எனக் கடத்தல் உலகில் குறிப்பிடுகிறார்கள்.

பலர் இதற்காகத் தங்களது உயிரையும் வாழ்வையும் பணயம் வைத்து இத்தகைய முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள். இரு நாடுகளின் பல அடுக்குப் பாதுகாப்பு, சுங்கச்சோதனைகளைக் கடந்து தங்கம் கடத்துவது எவ்வளவு கடினமான செயல் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பலர் சிக்கினாலும் கடத்தல் நின்றபாடில்லை.

குருவிகள் பல ரகம்

வேலையின்றித் தவிப்போர், பொருளியல் ரீதியில் நொடித்துப் போனோர் என சமூகத்தின் குறிப்பிட்ட அடுக்குகளைச் சேர்ந்தவர்கள்தான் கடத்தல் கும்பலின் முதல் குறி.

பண ஆசை காட்டி தங்கத்தைக் கடத்திச் செல்வது, ஏதோ சுற்றுலா செல்வது போன்ற அனுபவம் கிட்டும் என நம்ப வைத்து பலிகடா ஆக்குவர். எனினும் வெளிநாடு செல்லும் மோகம், அவ்வாறு சென்று திரும்பும் சூழலில் கைநிறைய கிடைக்கும் பணத்துக்கு ஆசைப்படுவோரும் உள்ளனர்.

கர்நாடகக் காவல்துறையின் உயரதிகாரி ஒருவரது மகள், தந்தையின் அதிகாரத்தைப் பயன்படுத்தி பலமுறை வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வந்த தகவல் சில மாதங்களுக்கு முன்பு தெரியவந்தது.

கேரள முதல்வர் பினராயி விஜயனின் செயலாளர் சிவசங்கர் மேனன், ஸ்வப்னா சுரேஷ் ஆகியோரும்கூட தங்கக் கடத்தல் விவகாரத்தில் சிக்கினர்.

கடந்த சில ஆண்டுகளில் ஆண்களுக்கு நிகராக தங்கக் கடத்தலில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதிலும், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு சிக்கும் பெண்கள்தான் அதிகம்.

10 ஆண்டுகளில் பிடிபட்ட தங்கம்

கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட, கடத்தலில் பிடிபட்ட தங்கத்தின் மதிப்பு எவ்வளவு என்பது குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி தெரிவித்துள்ளார்.

“2024-25ஆம் ஆண்டில் மொத்தம் 3,005 வழக்குகளில் தங்கத்தை புலனாய்வு அமைப்புகள் பறிமுதல் செய்துள்ளன. இந்தத் தங்கத்தின் அளவு முந்தைய ஆண்டைவிட பாதிக்கு மேல் குறைந்துள்ளது. இதன்படி, 2023-24ஆம் ஆண்டில் 6,599 கடத்தல் வழக்குகளில் சுமார் 4,972 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது, இதுவரை கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பில் அதிகபட்ச தொகையாகும். இது 2024-25ஆம் ஆண்டில் 2,600 கிலோவாகக் குறைந்துள்ளது.

“2023 நிதியாண்டில் 4,343 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2022 நிதியாண்டில் மற்றும் 2021 நிதியாண்டில் இந்தப் பறிமுதல் முறையே 2,172 கிலோ மற்றும் 1,944 கிலோவாக இருந்தது.

“விலை அடிப்படையில், தங்கம் இறக்குமதி 2024ஆம் ஆண்டில் 58 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது, 2023ஆம் ஆண்டில் 42.58 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. 2022ஆம் ஆண்டில், இந்த விலை மதிப்பற்ற மஞ்சள் உலோகமான தங்கத்தின் இறக்குமதி 36.59 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. 2021ஆம் ஆண்டில் இது 55.78 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது,” என்று நிதித்துறை இணையமைச்சர் தெரிவித்ததாக இந்திய ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்கா, பெரு ஆகிய நாடுகளில் இருந்து தங்கத்தை இறக்குமதி செய்தது இந்திய அரசு. இது முறையே 5.21 பில்லியன் அமெரிக்க டாலர், 4.37 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தங்கம் மீதான வரியை இந்திய அரசு குறைத்துள்ளதால் கடத்தலும் ஓரளவு குறைந்துள்ளது. எனினும், இந்தியாவில் தங்கச் சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது என்பதே எதார்த்தம் என்கிறார்கள் நிபுணர்கள்.

எனவே, இனிவரும் ஆண்டுகளில் தங்க இறக்குமதி மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்கிறது இந்திய அரசு.

மாட்டிக்கொள்ளும் அப்பாவிகள்

தங்கக் கடத்தலை முழுநேரப் பணியாகச் செய்யும் குருவிகளுக்கு, ஒரு கிராம் தங்கத்துக்கு ரூ.300 கிடைப்பதாகக் கூறப்படுகிறது.

வெளிநாடுகளில் பணியாற்றும் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்போர் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை குறிப்பிட்ட அளவிலான தங்கத்தை இந்தியாவுக்கு எடுத்துச் செல்லலாம் (ஏறக்குறைய 40 முதல் 80 கிராம் வரை). எனினும் உணவகம், கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களில் பெரும்பாலானோர், தங்கம் எடுத்துச் செல்வதில்லை.

இவர்களைக் கண்டறிந்து அணுகும் கடத்தல் முகவர்கள், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக தங்கத்தைக் கொடுத்து அனுப்புவதும் நடக்கிறது. ஒரு கிராமுக்கு ரூ.100 முதல் ரூ.200 வரை கிடைப்பதால் பலர் இதிலுள்ள ஆபத்து குறித்து யோசிக்காமல் ஒப்புக்கொள்வதுண்டு.

சுற்றுலாப் பயணிகள், குடும்பமாகப் பயணம் செய்வோரிடம் உதவி கேட்பதுபோல் நடித்து, “விமான நிலையத்துக்கு வரும் என் மனைவி (அல்லது சகோதரர், தங்கை) உங்களிடம் வந்து பெற்றுக்கொள்வர் என்று கூறி ஒப்படைக்கப்படும் தங்கம் ‘இலவச’மாகக் கடத்தப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் 186 பயணிகள் இருந்தனர். அவர்களில் 113 பேர் குருவிகள் எனத் தெரிய வந்தபோது அதிகாரிகள் அதிர்ந்து போயினர்.

குறி வைக்கப்படும் குருவிகள்

ஒருமுறை கடத்தலில் ஈடுபடும் ஒருவரால் அந்தக் கடத்தல் வளையத்திலிருந்து பிறகு வெளியேற இயலாமல் போகிறது. இப்படித்தான் சென்னையைச் சேர்ந்த ரசூல் கனி என்பவர், அப்துல் சலாம் என்பவருக்காக துபாய்க்குச் சென்று, மின்னணுப் பொருள்களைக் கொண்டு வரும் குருவியாகச் செயல்பட்டு வந்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் ரசூல் கனி துபாயில் இருந்து கிளம்பியபோது, வழக்கத்துக்கு மாறாக 2 கிலோ தங்கமும் அவரது உடைமைகளில் சேர்க்கப்பட்டது. இதனை ரசூல் எதிர்பார்க்காத போதும் குருவிகளால் எதையும் எதிர்க்க முடியாது என்பதால் மௌனத்துடன் உடன்பட்டார்.

திருச்சி வந்தடைந்த பின்னர், சென்னை நோக்கி காரில் சென்றபோது, திடீரென ஒரு கும்பல் வழிமறித்து, காரையும் ரசூலையும் தாக்கி தங்கம் உட்பட அனைத்தையும் பறித்துக்கொண்டு தலைமறைவானது. இதுகுறித்து உடனே தனது முதலாளி அப்துல் சலாமுக்கு ரசூல் கனி தகவல் தந்தார். ஆனால், அப்துல் சலாம் அதனை நம்பவில்லை.

விளைவாக, மாமல்லபுரத்தில் ஒரு மர்ம இடத்தில் வைத்து தொடர் சித்திரவதைகளுக்கு ரசூல் ஆளானார். ரசூல் சொன்னது உண்மைதான் என்பதை அப்துல் அண்ட் கோ உணர்ந்தபோது, ரசூலின் உயிர் ஊசலாடியது. அந்த நிலையில் ரசூலை ஒரு மருத்துவமனை அருகே மார்ச் 13ஆம் தேதியன்று அவர்கள் வீசிச் சென்றனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று, அண்மையில் வீடு திரும்பிய ரசூல், குருவி தொழிலுக்கு ஒரேயடியாக கும்பிடு போட்டதுடன், காவல்துறையில் புகாரும் அளிக்க, கடத்தல் கும்பலைச் சேர்ந்த நான்கு பேர் கைதாகினர். இதையடுத்து, தங்கக் கடத்தலில் குருவிகளைப் பணிக்கு அமர்த்துவோரை மட்டுமன்றி, குருவிகளைக் குறிவைத்து தாக்கும் கும்பல்களின் பின்னணி குறித்தும் காவல்துறை விசாரித்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்