சபாநாயகர்: ஆளுநரின் செயலை சட்டசபை வன்மையாகக் கண்டிக்கிறது

1 mins read
f64c305c-9ccd-4810-bc57-e473d7c31d9c
சட்டமன்றத்தில் தேசிய கீதத்தை முதலில் பாட வேண்டும் என்று கோரிக்கை வைப்பதற்கு ஆளுநருக்கு உரிமை இல்லை என்று கூறியுள்ளார் சபாநாயகர் அப்பாவு. - படம்: தி இந்து தமிழ் திசை

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் தேசியகீதம் இசைக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“சட்டமன்றத்தில் தேசிய கீதத்தை முதலில் பாட வேண்டும் என்று கோரிக்கை வைப்பதற்கு ஆளுநருக்கு உரிமை இல்லை. ஆளுநர் சட்டப்படி நடக்க வேண்டுமே தவிர கோரிக்கை வைக்க முடியாது. எழுதி கொடுப்பதை வாசிப்பது தான் ஆளுநரின் கடமை,” என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

இதுகுறித்து ஆளுநர், தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டது மக்களையும் பேரவை உறுப்பினர்களையும் அவமானப்படுத்தும் செயல். ஆளுநரின் இந்தச் செயலை சட்டசபை வன்மையாகக் கண்டிக்கிறது என்று கூறியுள்ளார் சபாநாயகர் அப்பாவு.

ஆளுநர் உரையின்போது தூர்தர்ஷன் தொலைக்காட்சி மூலம் வெட்டி, ஒட்ட முயற்சி நடந்தது. வெட்டி, ஒட்டும் முயற்சி முன்கூட்டியே கண்டுபிடிக்கப்பட்டதால் தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்கு நேரலை அனுமதி தரப்படவில்லை.

தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்கு நேரலை அனுமதி கொடுக்க ஆளுநர் தரப்பில் இருந்து நெருக்கடி கொடுக்கப்பட்டது. இதன் மூலம் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ் நாட்டு மக்களை அவமதித்துள்ளார் என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

ஆர்.என்.ரவி நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் ஆளுநராக இருந்தபோது, அங்கு சட்டசபையில் தேசிய கீதம் இசைக்கப்படுவதில்லை என்பதை கேள்விப்பட்டு, அவர்களை நிர்பந்தித்து முதல்முறையாக தேசியகீதத்தை இசைக்கச் செய்தவர். அதேபாணியில் தமிழகத்திலும் தேசியகீதம் இசைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்