சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் எஸ்ஐஆர் எனப்படும் சிறப்புத் தீவிரத் திருத்தம் கடந்த நவம்பர் மாதம் நான்காம் தேதி தொடங்கி இம்மாதம் 14ஆம் தேதி வரை நடந்தது.
இதனைத் தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் இம்மாதம் 19ஆம் தேதி வெளியிடப்பட்டது. தங்களின் பெயர்கள் விடுபட்டதாக வாக்காளர்கள் கூறிய நிலையில் தற்போது அவர்களின் பெயர்களைச் சேர்ப்பதற்குத் திருத்தங்களை மேற்கொள்ள சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதிபெறும் வாக்காளர்கள் தங்களின் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஏதுவாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் (டிசம்பர் 27, 28) சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. மேலும், வரும் ஜனவரி மாதம் மூன்று, நான்காம் தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று மாலை மலர் ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு முகாம்களில் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத 18 வயதை எட்டிய தகுதிபெற்றவர்கள் தங்களின் பெயரைச் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
சென்னை மாவட்டத்தில் 4,079 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. வாக்காளர்கள் அங்குச் சென்று உரிய படிவங்களை வழங்கிப் பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

