சேலம்: தமிழகம் எங்கும் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 15) சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
பருவகால நோய்களைத் தடுக்கும் வகையில் மழைக்கால சிறப்பு மருத்துவச் சிகிச்சை முகாம்கள் 1,000 இடங்களில் நடைபெற உள்ளன. இதனைப் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள அதிநவீன தீவிர சிகிச்சைப் பிரிவின் துவக்கவிழாவில் திங்கட்கிழமை (அக்டோபர் 14) கலந்துகொண்டு திரு சுப்பிரமணியன் பேசினார்.
தமிழகத்தில் பயன்படுத்தமுடியாத நிலையில் உள்ள 3,000 துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்களில் தற்போது வரை 1,100 கட்டடங்கள் புதிதாகக் கட்டப்பட்டுள்ளன.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை பாராட்டி ஐக்கிய நாடுகள் சபை தமிழ்நாடு மருத்துவத்துறைக்கு விருது வழங்கி உள்ளதைச் சுட்டிய அமைச்சர், உலகிலேயே மக்களைத் தேடி மருத்துவத் துறையே நேரில் சென்று மருத்துவம் வழங்கும் திட்டம் தமிழ்நாட்டைத் தவிர எங்கும் இல்லை என்றார். இத்திட்டத்தில் 1.95 கோடி பேர் பயன் பெற்றுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
போதைப்பொருள் பழக்கம் இளைஞர்களிடையே அதிகரித்து வருவது குறித்தும் வலி மாத்திரைகளை அதிகளவில் உட்கொள்வதால் வலி மாத்திரை விற்பனை அதிகரித்துள்ளது குறித்தும் தற்போது கண்காணிக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
மேலும் இணையம் மூலம் வலி மாத்திரை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் பொதுமக்கள் இதுகுறித்து புகார் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்தார்.

