சென்னை: தமிழகத்தில் போதைப்பொருளைக் கட்டுப்படுத்த காவல்துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மேற்பார்வையிட சிறப்பு கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, பொதுநல வழக்கு ஒன்றை விசாரித்தபோது, தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில், போதைப்பொருளுக்கு எதிராக பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த எடுத்து வரும் நடவடிக்கைகள், போதையில்லா தமிழ்நாடு என்ற செயலி உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.
“தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் செயலியும் தொடங்கப்பட உள்ளது,” என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை படித்துப் பார்த்த நீதிபதிகள், அண்டை மாநிலங்களில் இருந்து கூரியர் தபால் மூலம் போதைப் பொருள்கள் தமிழகத்திற்குள் நுழைவதாகக் குறிப்பிட்டனர்.
பள்ளி, கல்லூரிகளில் இருந்து நூறு மீட்டர் தூரத்துக்குள் போதை தரும் குட்கா பாக்கு, புகையிலைப் பொருள்களை விற்க தடை விதிப்பதாகவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், பல்வேறு மாவட்டங்களில் போதைப் பொருள்கள் எளிதில் கிடைக்கின்றன என்றும் இதனைக் கட்டுப்படுத்த மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் மாநில சட்டப் பணிகள் ஆணையக் குழுவிற்கு நிதிபதிகள் உத்தரவிட்டனர்.
போதைப்பொருள்களைக் கட்டுப்படுத்தும் காவல்துறையினரின் நடவடிக்கைகளை மேற்பார்வையிட போதைப்பொருள் தடுப்பு அதிகாரி, சிபிஐ அதிகாரி, அரசு அதிகாரிகள் அடங்கிய சிறப்பு கண்காணிப்புக் குழுவை அமைக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.