சென்னை: தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் உள்ள பேருந்து, ரயில், விமான நிலையங்களில் தனிப்படைகள் அமைத்து காவல்துறை கண்காணிப்புப் பணியை முடுக்கிவிட்டுள்ளது.
இதற்காக காவல்துறை உதவி ஆய்வாளர் தலைமையில் இரண்டு காவலர்கள் கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் போதைப்பொருள்களின் புழக்கம் அதிகரித்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன.
கோவா, கர்நாடகா, ஒடிசா, மணிப்பூர், ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து ‘மெத்தம்ஃபெட்டமைன்’, ‘கொக்கைன்’ உள்ளிட்ட போதைப்பொருள்கள் தமிழகத்திற்குக் கடத்தி வரப்படுகின்றன. மேலும், சென்னை வழியாக இலங்கைக்கும் அதிக அளவில் கஞ்சா கடத்தப்படுவது தெரியவந்துள்ளது.
சிறுகிராமங்கள் வரை கஞ்சா புழக்கம் அதிகமாகிவிட்டதாகப் பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
திரையுலக நட்சத்திரங்கள், முக்கியப் பிரமுகர்கள், கடத்தல்காரர்கள், வணிகர்கள் எனப் பலர் கைது செய்யப்பட்டாலும் போதைப்பொருள் புழக்கம் முடிவுக்கு வந்தபாடில்லை.
காவல்துறையால் கடத்தலையும் கட்டுப்படுத்த முடியவில்லை எனப் பரவலாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கெனவே கஞ்சா புழக்கத்தைத் தடுக்க ‘ஆப்பரேஷன் கஞ்சா-1,2,3’ என்ற பெயரில் நடவடிக்கை மேற்கொண்ட தமிழக காவல்துறை இப்போது புது வியூகம் ஒன்றை வகுத்துள்ளது.
பேருந்து, ரயில், விமானங்கள் மூலம்தான் போதைப்பொருள்கள் அதிக அளவில் கடத்தப்படுகின்றன. கடத்தல்காரர்கள் தனியார் வாகனங்களைவிட மத்திய, மாநில அரசுகளின் பொதுப் போக்குவரத்தைத்தான் அதிகம் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. கடத்தலுக்காகப் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் குறித்து ஆய்வு செய்தபோது இது தெரியவந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இதையடுத்து, சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கண்காணிப்பதும் கடத்தல் தொடர்பான தகவல்களைச் சேகரிப்பதும்தான் இந்தத் தனிப்படையினரின் முழு நேரப் பணி.
இதன்மூலம் கடத்தல் சம்பவங்களை வெகுவாகக் குறைக்க முடியும் என நம்புவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

