சென்னை: இலங்கை சிறையில் வாடும் மீனவர்களைச் சந்திக்கவும் மீனவர் பிரச்சினை தொடர்பாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தமிழக மீனவர்கள் குழு ஒன்று கொழும்பு சென்றது.
ஐவர் கொண்ட இந்த மீனவர்கள் குழு, ஆறு நாள்கள் இலங்கையில் தங்கி மீனவர்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண முயற்சிகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரையில், மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்துகிறது. மத்திய அரசோ, இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பது மீனவர்களின் குமுறல்.
இதனையடுத்து தமிழ்நாட்டு மீனவர் சங்கப் பிரதிநிதிகள் குழு இலங்கை சென்றுள்ளது.
அந்தக் குழுவைச் சேர்ந்த ஐவரும் செவ்வாய்க்கிழமை திருச்சியில் இருந்து கொழும்பு நகருக்கு விமானத்தில் சென்றனர்.
இலங்கைச் சிறைகளில் மீனவர்களைச் சந்தித்துப் பேசுவதோடு அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகுகளையும் குழு பார்வையிடும்.
பின்னர், நிலைமையைச் சரிசெய்வது குறித்து இலங்கை அரசுடன் அந்தக் குழு பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் ஏப்ரல் 1ஆம் தேதி அக்குழு நாடு திரும்பும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.