சென்னை: தமிழ்நாட்டில் தொடர் விடுமுறை, பண்டிகை நாள்களில் தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிகக் கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட விதிமீறல்களைத் தடுக்கத் தமிழகப் போக்குவரத்து ஆணையம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
அடுத்த மாதம் காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2), ஆயுத பூஜை (அக்டோபர் 19), தீபாவளி (நவம்பர் 8) என அடுத்தடுத்து தொடர் விடுமுறைகள் வர உள்ளன.
இதையொட்டி ஆம்னி பேருந்துகளின் இயக்கம் அதிகரிக்கும் என்பதால், பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது, வரி நிலுவை வைத்திருப்பது, அதிகச் சுமைகளை ஏற்றிச் செல்வது, உரிய அனுமதி இல்லாமல் பேருந்துகளை இயக்குவது போன்ற விதிமீறல்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது.
இதனைத் தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட உள்ளன.
ஒவ்வொரு குழுவிலும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி உட்பட மூன்று பேர் இடம்பெறுவார்கள்.
இந்தக் குழுவினர் நெடுஞ்சாலைகள், முக்கியப் பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் திடீர்ச் சோதனை நடத்தி ஆம்னி பேருந்துகளைக் கண்காணிப்பார்கள்.
விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் அபராதம் விதிப்பதுடன், தேவையான இடங்களில் அனுமதி ரத்து உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று போக்குவரத்து ஆணையத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


