மகப்பேறு இறப்பு விகிதத்தைக் குறைக்க சிறப்புப் பணிக்குழு

மகப்பேறு இறப்பு விகிதத்தைக் குறைக்க சிறப்புப் பணிக்குழு

ஊடகம்

02 Oct 2024 - 7:33 pm

2 mins read

சென்னை: மகப்பேறு இறப்பு விகிதத்தைக் குறைக்கும் நோக்கில், மாநில அளவிலான சிறப்புப் பணிக்குழு ஒன்றைத் தமிழக அரசு அமைத்துள்ளது.

தமிழ்நாட்டில் மகப்பேறு இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்கு மக்கள் நல்வாழ்வுத் துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது.

இந்நிலையில், மகப்பேறு மரணத்தை ஒரு லட்சத்திற்கு 10க்கும் குறைவாகக் கொண்டுவரும் நோக்கில் சிறப்புப் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏற்கெனவே 2014-2015ஆம் ஆண்டிலேயே மகப்பேறு இறப்பு விகிதம் 70 என்ற நிலையான வளர்ச்சி இலக்கை மாநிலம் எட்டியுள்ளது. எனினும், 2023-2024 மாதிரி பதிவு அமைப்பு (எஸ்ஆர்எஸ்) தரவுகளின்படி, மகப்பேறு இறப்பு விகிதம் 1 லட்சத்துக்கு 45.5ஆக இருப்பதை அடுத்த 2 ஆண்டுகளில் 10க்கும் குறைவாகக் குறைக்க முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என அரசு முடிவு செய்துள்ளது,” எனக் கூறப்பட்டுள்ளது.

அக்குழுவிற்கு மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் தலைவராகச் செயல்படுவார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை ஆகிய துறைகளின் செயலாளர்கள் மற்றும் பிற உறுப்பினர்களுடன் தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் உறுப்பினர் - செயலாளராகச் செயல்பட்டு மகப்பேறு இறப்புகளைக் குறைப்பதில் கவனம் செலுத்துவர்.

மகப்பேற்றுக்கு முந்தைய திட்டமிடல், திறன் மேம்பாடு, அத்தியாவசிய தொழில்நுட்ப மற்றும் மருத்துவ உதவிகள் போன்றவை மூலம் மகப்பேறு இறப்பு விகிதத்தைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவ்வாறே, மாவட்ட ஆட்சியரைத் தலைவராகக் கொண்டு, மாவட்ட அளவிலான சிறப்பு பணிக்குழு, இதர உறுப்பினர்களுடன் செயல்பட்டு, ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்ணுக்கான விரிவான பிறப்பு திட்டமிடலைச் செயல்படுத்தும்.

இம்முயற்சியினை வலுவாக்க வல்லுநர்களையும் நிபுணத்துவ நிறுவனங்களையும் இணைத்துக் கொள்ள மாவட்ட அளவிலான சிறப்பு பணிக்குழுவிற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது என்று அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்