திருவாரூர்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி, அவரது சொந்த ஊரில் குலதெய்வ வழிபாடு நடைபெற்று உள்ளது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தில் கமலா ஹாரிஸின் தாய்வழி குலதெய்வமான ஸ்ரீதர்ம சாஸ்தா ஸ்ரீ சேவகப் பெருமாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 5) காலை சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
அதேபோல, மதுரையிலும் கமலா ஹாரிஸ் வெற்றிபெற அங்குள்ள எஸ்எஸ் காலனியில் திங்கட்கிழமை சிறப்புப் பூஜை நடத்தப்பட்டது.
அந்தப் பகுதியில் உள்ள ஸ்ரீதர்ம சாஸ்தா கோவிலில் நடைபெற்ற அந்தப் பூஜையில் திமுக மாநகராட்சி உறுப்பினர் அருள்மொழியும் அவரது கணவர் சுதாகரும் கலந்துகொண்டனர்.
நமது மண்ணின் மகளான கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபராக வெற்றிபெற வழிபாடு நடத்தினோம் என்று ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’விடம் சுதாகர் கூறினார்.
துளசேந்திரபுரம் கிராமத்தில் பிறந்த பி.வி.கோபால் ஐயர் - ராஜம் தம்பதியரின் மகள்கள் சியமளா, சரளா.
அரசாங்க வேலை கிடைத்ததையடுத்து பூர்வீகச் சொத்துகளை விற்றுவிட்டு கோபால் ஐயர் குடும்பத்துடன் வெளியூர் சென்றார்.
தொடர்ந்து அவரது ரத்த சொந்தங்களும் துளசேந்திரபுரத்திலிருந்து பணி நிமித்தமாக வெளியேறிவிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
கோபால் ஐயரின் மகள் சியமளா அமெரிக்காவில் சட்டப் படிப்பு படித்தபோது உடன் படித்த டோனல்ட் ஹாரிஸ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்தார்.
அவர்களுக்கு கமலா, மாயா என இரு பெண் குழந்தைகள் பிறந்தபின் தமது கணவரை சியமளா விவாகரத்து செய்துவிட்டார்.
கமலா தமது தாயார் சியமளா போல், அமெரிக்காவில் கல்வி பயின்றதுடன் பொது வாழ்க்கையிலும் ஈடுபட்டு அரசியலில் நுழைந்தார்.
தற்போது, அமெரிக்காவின் துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ், நவம்பர் 5ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக போட்டியிட்டார்.
டிரம்ப் வெற்றிபெறவும் வழிபாடு
கமலா ஹாரிசுக்கு எதிராகக் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டோனல்ட் டிரம்ப் வெற்றி பெறவும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு உள்ளது.
தலைநகர் புதுடெல்லியில் திங்கட்கிழமை (நவம்பர் 3) நடைபெற்றதாகக் கூறப்படும் அந்த நிகழ்வைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியது.
“டோனல்ட் டிரம்பால் மட்டுமே உலகில் அமைதியை நிலைநாட்ட முடியும்,” என்று வழிபாட்டில் கலந்துகொண்ட ஆன்மிகத் தலைவரான சுவாமி வேத்முடிநந்த சரஸ்வதி கூறியதும் அந்தக் காணொளியில் பதிவாகி உள்ளது.