தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நடப்பது மக்கள் ஆட்சியா, காவல்துறை ஆட்சியா என அன்புமணி கேள்வி

1 mins read
1abe44c7-567a-4cdc-ab25-1f4a58b3ae54
அன்புமணி ராமதாஸ் - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் நடப்பது மக்கள் ஆட்சியா அல்லது காவல்துறை ஆட்சியா என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவல்துறை அத்துமீறலைக் கண்டித்து சாலை மறிலில் ஈடுபட்ட கிராம மக்கள் மீது காவல்துறையினர் மீண்டும் கடும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளதை வன்மையாகக் கண்டிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு, அதைச் சுற்றியுள்ள 18 கிராம மக்கள் அண்மைய மாதங்களில் பெய்த மழையால் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.

“அரசு தரப்பில் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று கூறி கிராம மக்கள் கடந்த டிசம்பர் 3ஆம் தேதி சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்டது.

“இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என அமைச்சர் அறிவுறுத்திய பிறகும், காவல்துறையினர் கிராம மக்களுக்குத் தொடர்ந்து தொல்லைகள் கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது,” என அன்புமணி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்துவதில் தவறில்லை. ஆனால், கலைந்து சென்ற மக்களை பயங்கரவாதியைப் போல் காவல்துறை வேட்டையாடியதை மன்னிக்க முடியாது.

“அமைச்சர் அவமதிக்கப்பட்டார் என்பதற்காக அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகிறது என்றால் ஆட்சியாளர்களின் மனதில் பழிவாங்கும் உணர்வு எந்த அளவுக்கு ஊறி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

“இதற்கெல்லாம் மக்கள் பாடம் புகட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை,” என அன்புமணி ராமதாஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்