சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எனத் தனியாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கடந்த 1994ஆம் ஆண்டுக்குப்பின் தமிழகத்தில் விளையாட்டுத் துறையில் பெரிய வளர்ச்சி என ஏதும் இல்லை எனக் குறிப்பிட்டார்.
ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எனத் தனியாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவதாகத் தெரிவித்த அமைச்சர், அனைவருக்கும் விளையாட்டு என்ற பெயரில் தமிழக எம்எல்ஏ, எம்பிக்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என்றார்.
“இந்தப் போட்டி நடத்தப்படும்போது அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து வேறுபாடு இன்றி ஒற்றுமையாக விளையாட வேண்டியது அவசியமாகும். மேலும், திமுக, அதிமுக என்ற பிரிவுகள் இன்றி, அனைத்துப் பூசல்களையும் மறந்து ஓர் அணியாக நிற்க வேண்டும்,” என்று அமைச்சர் ஆதவ் ஆர்ஜுனா கூறினார்.
அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்குள், தமிழகத்தில் விளையாட்டுத் தரம் உலக அளவில் உயர்த்தப்படும் என்றும் விளையாட்டுத் துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தை ஒலிம்பிக் பவனாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்ட அமைச்சர், திருவண்ணாமலை, திருநெல்வேலி போன்ற பின்தங்கிய மாவட்டங்களில், ஒலிம்பிக் சங்கம் அமைக்கவும் அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டு விடுதிகள் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
“கடந்த 30 ஆண்டுகளாக கர்நாடகா, பஞ்சாப் மாநிலங்கள் விளையாட்டுத் துறையில் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளன. ஆனால், இங்கு எந்த வளர்ச்சியும் இல்லை. விளையாட்டுத் துறையையும் தமிழக வீரர், வீராங்கனைகளையும் அனைத்துலக அளவில் உயர்த்துவோம்,” என்றார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.

