சென்னை: தான் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலுக்குச் சென்று திரும்பியது தொடர்பாக சிலர் பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதாக இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
இரு தினங்களுக்கு முன்பு அக்கோவிலுக்குச் சென்ற இளையராஜாவுக்கு கோவில் யானையைக் கொண்டு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இளையராஜாவை கருவறைக்குள் அனுமதிக்கவில்லை என்றும் கோவிலில் அவமதிக்கப்பட்டார் என்றும் தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின.
இதையடுத்து கோவில் நிர்வாகம் ஒரு விளக்கம் அளித்திருருந்தது. தற்போது இளையராஜா தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
“என்னை வைத்து சிலர் வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாக வதந்தி பரப்புகிறார்கள்.
“அவற்றை ரசிகர்களும் பொதுமக்களும் நம்ப வேண்டாம்,” என இளையராஜா கேட்டுக் கொண்டுள்ளார்.