கோவை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உருவாக்கப்பட்டுள்ள ‘விதை விநாயகர்’ சிலைகள் கோவையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள இந்தச் சிலைகள், சுற்றுச்சூழலுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில் தூய்மையான களிமண்ணைக் கொண்டு செய்யப்பட்டவை.
இந்தப் பிள்ளையார் சிலைகளின் உட்புறத்தில் பல்வேறு வகையான கீரை விதைகள் வைக்கப்பட்டுள்ளது.
பண்டிகை வழிபாடுகள் முடிந்த பின்னர், இச்சிலைகளை வீடுகளில் உள்ள பூந்தொட்டிகளில் வைத்துத் தண்ணீர் ஊற்றினால் மண் எளிதில் கரைந்துவிடும்.
அதன் பிறகு, சிலைக்குள் இருக்கும் விதைகள் சில நாட்களிலேயே செடிகளாக முளைக்கத் தொடங்கிவிடும்.
இதன் மூலம் நீர்நிலைகள் மாசடைவது தடுக்கப்படுவதுடன், வீடுகளிலேயே செடிகளை வளர்க்கும் பயனும் கிடைக்கிறது.
அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகளில் வசிப்பவர்கள், வழிபாட்டிற்குப் பிறகு சிலைகளைக் நீர்நிலைகளில் கரைப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இச்சிக்கலுக்குத் தீர்வாக இந்த இயற்கை நட்புச் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
அளவிற்கு ஏற்ப ரூ.100 முதல் ரூ.1,500 வரை விற்பனை செய்யப்படும் இந்த விதை விநாயகர் சிலைகள், பண்டிகைக் காலத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் அமைந்திருப்பதாக மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

