தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நாகப்பட்டினம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

2 mins read
aa43aefa-745f-44f0-9c29-8412afdf3897
இலங்கையைச் சேர்ந்த கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டு உடைமைகளை இழந்த மீனவர்கள். - படம்: ஊடகம்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் நாட்டுப்படகில் ஆழ்கடலுக்குச் சென்றனர். அங்கு இரண்டு படகுகளில் வந்த இலங்கையர்கள் சிலர், தமிழக மீனவர்களைத் தாக்கி, அவர்களிடம் இருந்த வலைகளைப் பறித்துச் சென்றனர். அவர்கள் கடற்கொள்ளையர்கள் என்று நம்பப்படுகிறது. இந்தச் சம்பவம் நாகப்பட்டின மீனவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை ராணுவத்தினர், இலங்கைக் கடற்கொள்ளையர்கள், இலங்கை மீனவர்கள் ஆகியோரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும் அவர்களது உடைமைகள் அபகரிக்கப்படுவதும், சிறை வைக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக மத்திய அரசுக்கு மாநில அரசு பலமுறை கடிதங்கள் எழுதியும் இன்னும் இந்தப் பிரச்சினை தொடர்கதையாகி வருவதால், தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க ஆழ்கடலுக்குச் செல்வதற்கு அஞ்சுவதாகக் கூறப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு, கோடியக்கரைக்கு தென்கிழக்கே 25 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது அங்கு இரண்டு படகுகளில் வந்த இலங்கையைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள் ஆறு பேர், இவர்களது படகில் ஏறி மீனவர்களை இரும்புக் கம்பியால் தாக்கியும், அரிவாளால் வெட்டியும் உள்ளனர். இதில் மூன்று பேர் கடுமையாகக் காயமடைந்து, வேதாரண்யம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அரிவாளால் வெட்டி மீனவர்களை அச்சுறுத்திய கடற்கொள்ளையர்கள் அதைத் தொடர்ந்து படகில் இருந்த 300 கிலோ வலைகளை வெட்டி எடுத்துச் சென்றனர். அத்துடன் படகில் இருந்த ஜிபிஎஸ் கருவி, கைப்பேசி உள்ளிட்டவற்றையும் பறித்துச் சென்றனர்.

இதேபோல், இன்னொரு சம்பவத்தில் பெருமாள் பேட்டையைச் சேர்ந்த மீனவர்களை இலங்கைக் கடற்கொள்ளையர்கள் தாக்கியதுடன் அவர்களின் உடைமைகளைப் பறித்துக் கொண்டு சென்றுள்ளனர்.

இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் வேதாரண்யம் கடலோரக் காவல் நிலைய காவலர்கள் விசாரணை செய்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்