ராமேசுவரம்: இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 33 பேர் கைது செய்யப்பட்டது மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீனவர்களின் மூன்று விசைப்படகுகளையும் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த சனிக்கிழமையன்று 439 விசைப்படகுகளில், மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
இந்திய குடியரசு தினமான ஞாயிற்றுக்கிழமையன்று (ஜனவரி 26) அதிகாலை வேளையில் வடக்கு மன்னார் கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மூன்று விசைப்படகுகளைச் சுற்றி வளைத்து 33 மீனவர்களைக் கடல் எல்லையை தாண்டிய குற்றச்சாட்டின்கீழ் கைது செய்தனர்.
மீனவர்கள் பின்னர் இலங்கை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இலங்கை மீன்வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
33 மீனவர்களும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர் என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 51 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே, மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.