தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழக மீனவர்களிடம் கொள்ளையடித்த இலங்கை கடற்கொள்ளையர்கள்

2 mins read
0a675889-bf18-4edd-9d34-5a2885affc4e
தமிழில் பேசிய கடற்கொள்ளையர்கள் பொருள்களோடு மீன்களையும் கொள்ளையடித்துச் சென்றனர். - கோப்புப் படம்: தமிழக ஊடகம்

நாகை: மீனவர்களின் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்களை இலங்கைக் கடற்கொள்ளையர்கள் அபகரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியை அடுத்த செருதூர் மீனவ கிராமத்திலிருந்து செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 8) ஏராளமான மீனவர்கள் ஃபைபர் படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.

ராஜ்குமார் என்பவருக்குச் சொந்தமான பைபர் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ராஜ்குமார் உள்ளிட்ட 5 ஆடவர்கள் புதன்கிழமை இரவு கோடியக்கரையில் இருந்து தென்கிழக்கே 20 நாட்டிக்கல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது இரு ஃபைபர் படகுகளில் அங்கு வந்த இலங்கையைச் சேர்ந்த தமிழ் பேசக்கூடிய 9 பேர், தங்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 200 கிலோ வலையைப் பறித்துச் சென்றுவிட்டதாக வியாழக்கிழமை காலை கரை திரும்பிய மீனவர்கள் புகார் அளித்துள்ளனர்.

இதேபோன்று செல்லையன் செருதூர் என்பவருக்குச் சொந்தமான பதிவெண் இல்லாத ஃபைபர் படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற செல்லையன் உள்ளிட்ட 5 பேரை, அதே கடற்கொள்ளைக் கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி 200 கிலோ வலை, ஜிபிஎஸ்-1, சுமார் 100 கிலோ மீன், மூன்று கைப்பேசிகள் ஆகியவற்றை பறித்துச் சென்றதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து மீனவர்கள் இதேபோன்ற புகார்களைத் தெரிவித்தனர்.

மொத்தமாக நான்கு மீன்பிடி படகில் இருந்த 770 கிலோ வலை, சுமார் 100 லிட்டர் டீசல், மீன்கள், திசை காட்டும் ஜிபிஎஸ் கருவி, கைப்பேசி, கைவிளக்கு (டார்ச் லைட்) என பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்களைக் கொள்ளையர்களிடம் பறிகொடுத்து விட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கீழையூர் கடலோரக் காவற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்