தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழக மீனவர்கள் 50 பேரை விடுவித்தது இலங்கை அரசு

2 mins read
மீனவர்களின் வாழ்வாதாரத்தை முடக்கும் இலங்கையின் போக்கு கண்டிக்கத்தக்கது: ராமதாஸ்
3d7ba620-cc5e-4bf2-a016-1d8d6568492e
இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள். - படம்: இந்திய ஊடகம்

சென்னை: வங்கக் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களைக் கைது செய்து சிறையில் அடைப்பது, அவர்களை மீன்பிடிக்க விடாமல் தடுத்து விரட்டுவது போன்ற நடவடிக்கைகளை இலங்கைக் கடற்படை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. அவ்வகையில் அண்மையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களில் 50 பேரை இலங்கை விடுவித்துள்ளது.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இலங்கை சென்றுள்ள நிலையில் தமிழக மீனவர்கள் 50 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் புகைப்படத்தையும் இலங்கை அரசு வெளியிட்டுள்ளது. இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களில் கடந்த மாதம் 7 இந்திய மீனவர்களும் ஆகஸ்ட் மாதம் 30 மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர். தற்போது அவர்களைத் தொடர்ந்து 50 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைதுசெய்யும் போக்கைக் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேருக்குத் தலா 40 லட்சம் இலங்கை ரூபாய் வீதம் ரூ.1.60 கோடி அபராதமும் ஒரு மீனவருக்கு 18 மாதங்கள் சிறைத் தண்டனையும் விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இலங்கை அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளால் தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரங்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

“இரண்டாவது முறையாக எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி புதுக்கோட்டை மீனவர் ஒருவருக்கு இலங்கை நீதிமன்றம் 18 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. அதேபோல், மீனவர்கள் சிலருக்கு தலா 40 லட்சம் இலங்கை ரூபாய் வீதம் ரூ.1.60 கோடி அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், அதை அவர்களால் செலுத்த முடியாததால் அவர்களும் சிறையில் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

“எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி அபராதம் விதிக்கப்பட்டும், சிறைத் தண்டனை விதிக்கப்பட்டும் இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்களை அவர்களின் படகுகளுடன் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்,” என்று திரு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்