ராமேசுவரம்: தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நமல் ராஜபக்ச, எம்எல்ஏ எம்.ஹிஸ்புல்லா உள்ளிட்ட இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களுடைய வாழ்த்தைப் பதிவு செய்துள்ளனர்.
இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகனும் இலங்கை எம்பியுமான நமல் ராஜபக்ச வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோசப் விஜய் சந்திரசேகருக்கு வாழ்த்துகள் என்றும் மக்களுக்குத் தேவையான பயனுள்ள திட்டங்களைச் கொண்டு சேர்க்க விஜய்க்கும் அவரது குழுவினருக்கும் மன வலிமையும் துணிச்சலும் கிடைக்க வாழ்த்துகள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாட்டு மக்களையும் பாதிக்கும் பல்வேறு முக்கிய விவகாரங்களில், இலங்கையுடன் வலுவான மற்றும் ஆக்கபூர்வமான உறவை வளர்த்தெடுக்க புதிய தலைமை வழிவகுக்கும் எனத் தாம் நம்புவதாகவும் நமல் ராஜபக்ச கூறியுள்ளார்.
இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்எல்ஏஎம் ஹிஸ்புல்லா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மக்கள் மையப்படுத்தப்பட்ட அரசியல் பயணத்தைத் தொடங்கும் இந்த முக்கிய தருணத்தில், தவெக தலைவர் விஜய்க்குத் தேவையான மனவலிமை, தொடர் வெற்றி கிடைக்க வாழ்த்துவதாகத் தெரிவித்துள்ளார்.
“இலங்கை, தமிழக மக்களுக்கிடையேயான வரலாற்று, கலாசார மனிதாபிமான உறவுகள் பல தசாப்தங்களாக வலுவாக இருந்து வருகின்றன. குறிப்பாக இலங்கை எதிர்நோக்கிய பல்வேறு சவாலான காலகட்டங்களில், தமிழக அரசும் தமிழக மக்கள் வழங்கிய ஆதரவும் ஒத்துழைப்பும் எப்போதும் நினைவுகூரத்தக்கவை,” என்று ஹிஸ்புல்லா மேலும் கூறியுள்ளார்.

