ராமேசுவரம்: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்டு வருவதைக் கண்டித்து ராமேசுவரத்தில் மீனவர்கள் கையில் திருவோடு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களையும் அந்நாட்டுக் கடற்படையால் கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி நடைபெற்ற இப்போராட்டத்தின்போது, அடுத்தகட்டமாக தீக்குளிக்கும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மீனவர்கள் அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இலங்கை கடற்படையால் கடந்த ஜனவரி முதல் 18 படகுகள் சிறைபிடிக்கப்பட்டு, 131 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதைக் கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் பிப்ரவரி 24 முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மூன்றாவது நாளன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மீனவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மீனவர் பிரச்சினை குறித்து மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றும் உறுதி அளித்தார்.
இந்நிலையில் திங்கட்கிழமையன்று மீனவர்கள் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ராமநாதபுரம் எம்எல்ஏ காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் ஆகியோர் போராட்டத்தைக் கைவிடுமாறு மீனனவர்களிடம் கேட்டுக் கொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
எனினும், அதை ஏற்காத மீனவர் சங்கப் பிரதிநிதிகள் போராட்டம் நீடிக்கும் எனத் தெரிவித்தனர்.
இதற்கிடையே, செவ்வாய்க்கிழமையன்று தீக்குளிப்புப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து காவல்துறையினரும் தீயணைப்புப் படையினரும் மீனவர்கள் போராட்டம் நடத்தும் இடத்தில் குவிக்கப்பட்டனர்.