சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், மாநிலத்தில் உள்ள முகாம்களில் பல பத்தாண்டுகளாக வசித்துவரும் ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள், தங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற நீண்டகாலக் கோரிக்கையை மீண்டும் எழுப்பியுள்ளனர்.
இலங்கை உள்நாட்டுப் போரின்போது அங்கிருந்து தப்பிய ஏராளமான தமிழர்கள் தமிழ்நாட்டில் அகதிகளாகத் தஞ்சமடைந்தனர். அப்போதுமுதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள துயர்துடைப்பு முகாம்களையே அவர்கள் தங்கள் வீடாகக் கருதி வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களில் பலர் பல தலைமுறைகளாக இந்தியாவிலேயே தங்கியுள்ளனர்; ஏராளமான குழந்தைகள் முகாம்களிலேயே பிறந்து, உள்ளூர் பள்ளிகளில் பயின்று, இந்தியாவிலேயே வளர்ந்துள்ளனர்.
இருப்பினும், இந்தியக் குடியுரிமை இல்லாதது தங்களது அன்றாட வாழ்வில் பெருந்தடைகளை ஏற்படுத்துவதாக அவர்கள் கூறுகின்றனர்.
ஒருசிலருக்குத் தனியார் துறையில் வேலை கிடைத்தாலும், வேலை தேடுவதில் பாகுபாட்டை எதிர்கொள்வதாகவும், அரசுப் பணிகளைப் பெறுவது தங்களுக்கு எட்டாக்கனியாக இருப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினாலும், குடியுரிமை இல்லாதது தங்களது நீண்டகாலப் பாதுகாப்பையும் எதிர்கால வாய்ப்புகளையும் கட்டுப்படுத்துவதாக அவர்கள் கருதுவதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் பிறந்து வளர்ந்தும் அகதி என்ற நிலையிலேயே இருக்கும் பலர், குறிப்பாகத் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு தங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர்.
குடியுரிமை கிடைத்தால் அடுத்த தலைமுறையினருக்குச் சிறந்த கல்வி, வேலைவாய்ப்பு, நிலையான வாழ்க்கை அமையும் என அவர்கள் நம்புகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
அதிகாரத்துவத் தகவலின்படி, தமிழகம் முழுவதும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்களில் ஏறக்குறைய 58,000 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வசித்து வருகின்றனர். மேலும் 30,000 பேர் முகாம்களுக்கு வெளியே பதிவுசெய்யப்பட்ட நிலையில் வாழ்கின்றனர்.
இந்நிலையில், தகுதியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்றும் மற்றவர்களுக்கு நீண்டகால விசா வழங்கி பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி, மத்திய அரசுக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

