ஸ்ரீரங்கம் கோவில் நில மோசடி: திமுக பகுதிச் செயலாளர் கைது

ஸ்ரீரங்கம் கோவில் நில மோசடி: திமுக பகுதிச் செயலாளர் கைது

படம்: இந்து தமிழ் திசை

02 Oct 2026 - 7:01 pm

2 mins read

திருச்சி: ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் திருக்கோவிலுக்குச் சொந்தமான, ரூ.50 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த வழக்கில், திமுக பகுதி செயலாளர் ராம்குமாரை காவல்துறையின் மாநகரக் குற்றப்பிரிவுத் தனிப்படையினர் கைது செய்துள்ளனர்.

திருச்சி திருவானைக்காவல் சீனிவாச நகரைச் சேர்ந்த ராம்குமார், திமுக ஸ்ரீரங்கம் பகுதிச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.

காந்தி சாலையில் அமைந்துள்ள ரங்கநாதர் கோவிலுக்குச் சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான சொத்தை, போலி ஆவணங்கள் தயாரித்து ராம்குமார் அபகரித்துக் கொண்டதாகக் கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் திருச்சி மாநகர குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

அப்புகாரின் அடிப்படையில், ராம்குமார், போலி ஆவணங்கள் தயாரித்துக் கொடுத்ததாகச் சென்னையைச் சேர்ந்த பத்மஜா, விஜயா, சௌந்தரராஜன், புதுவையைச் சேர்ந்த ரங்கவரதன், பத்திரப்பதிவு செய்து கொடுத்த அன்றைய ஸ்ரீரங்கம் சார்பதிவாளர் வனிதா உட்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கில் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க ராம்குமார், சார்பதிவாளர் வனிதா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்பிணை கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.

அம்மனுவை வியாழக்கிழமை (அக்டோபர் 1) விசாரித்த நீதிபதி கே.முரளி சங்கர், இருவரின் முன்பிணை மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதனிடையே, விசாரணைக்காக காரில் புறப்பட்டுச் சென்ற ராம்குமாரை, பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அருகே வைத்து ஆய்வாளர் சண்முகவேல் தலைமையிலான தனிப்படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணியாற்றி வரும் சார்பதிவாளர் வனிதாவையும் கைது செய்ய தனிப்படை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்