சென்னை: நாடாளுமன்றக் கூட்டத் தொடர்பாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைக்குமாறு திமுகவினரிடம் கேட்டுக்கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். அதில் தொகுதி மறுவரையறை தொடர்பாக கூட்டு நடவடிக்கைக் குழுவில் பங்கேற்க தென்மாநிலக் கட்சிகளின் தலைவர்களை நேரில் சென்று அழைக்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழு அமைப்பது பற்றி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முதலாவது தீர்மானம்
மறுசீரமைப்பினால் தொகுதிகளை இழக்கும் மற்ற மாநிலங்களையும் ஒருங்கிணைத்து களம் காண்பது.
தமிழ்நாட்டிற்குரிய நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்று கூட குறையாத வகையிலும், நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டிற்குரிய தொகுதிகளின் விகிதாசாரத்தைத் தக்க வைப்பதிலும் வெற்றியை ஈட்டுவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தமிழ்நாட்டிற்கான நிதிப் பகிர்வில் தொடர்ந்து பாரபட்சம் காட்டி வருவதுடன், பல துறைகளிலும் தமிழ் நாடு அடைந்திருக்கும் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக உள்ள இருமொழிக் கொள்கைக்கு எதிரான இந்தித் திணிப்பு முயற்சியையும் மேற்கொண்டு தமிழ்நாட்டை தொடர்ச்சியாக வஞ்சித்து வரும் மத்திய பா.ஜ.க.வைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க இந்தத் தீர்மானம் வகை செய்யும்.
இரண்டாவது தீர்மானம்
மக்களவைத் தொகுதிகளைப் பாதுகாக்கும் முயற்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் முயற்சிக்குத் துணை நின்று நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவது. மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தியதால் மக்களவைத் தொகுதிகளை இழக்க நேரிடும் அபாயத்தில் உள்ள ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப் என பாதிக்கப்படவிருக்கும் 7 மாநிலங்களைச் சார்ந்த கட்சிகளையும் ஒருங்கிணைத்துப் போராட்டக் களத்திற்கு அழைத்து வரும் பொறுப்பைக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து மேற்கொள்வர்.
மூன்றாவது தீர்மானம்
தொகுதி மறு சீரமைப்பில் மாநில உரிமைகளை நிலைநாட்டும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்துச் செயல்படுவது ஆகியவையே இந்த மூன்று தீர்மானங்கள்.
டெல்லியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், தோழமைக் கட்சி உறுப்பினர்கள், இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் மட்டுமின்றி ஜனநாயகத்தைக் காப்பதில் உறுதியாக உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து, கழகத் தலைவர் தமிழ்நாடு முதல்-அமைச்சர் முன்னெடுத்துள்ள தொகுதி மறுசீரமைப்பில் மாநிலங்களுக்கான உரிமைகளை நிலைநாட்டும் வகையில் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து தொகுதிகளையும் அதன் விகிதாச்சாரத்தையும் பாதுகாப்பது.
தொடர்புடைய செய்திகள்
7 மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்க ஸ்டாலின் வலியுறுத்து
மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டபின், திமுக தலைவர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, தொகுதி மறுவரையறை என்பது தனிப்பட்ட ஒரு கட்சியின் பிரச்சினை இல்லை. தமிழ்நாட்டின் பிரச்சினை, பல மாநிலங்களின் பிரச்சினை என்று கூறினார்.
எனவே, தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருங்கிணைத்து, டெல்லியில் முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். டெல்லியில் உடனடியாகத் தமிழ்நாடு எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டி கருத்துகளைப் பெற்று செயல்பட வேண்டும். தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படும் 7 மாநிலங்களில் உள்ள 29 கட்சிகளுக்கும் கடிதம் எழுதுங்கள் என்று தனது கட்சி நிர்வாகிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தொகுதி மறுசீரமைப்புக் கூட்டு நடவடிக்கைக் குழு தொடர்பாக மற்ற மாநிலங்களுக்கு, அமைச்சர்கள் சென்று அழைப்பு விடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவுக்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ஆந்திராவுக்கு எ.வ.வேலு, மேற்கு வங்கத்திற்கு கனிமொழி, ஒடிசா மாநிலத்திற்கு டி.ஆர்.பி. ராஜா செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.