தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கருணாநிதி ஆதரித்ததை ஸ்டாலின் எதிர்க்கிறார்: நிர்மலா சீதாராமன்

2 mins read
8bdfd7c2-d2c2-45ad-aff1-10ffee6332ef
சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் இருக்கும் எஸ்ஆா்எம் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 5) நடைபெற்ற கருத்தரங்கில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். - படம்: இந்திய ஊடகம்

சென்னை: ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ முறைக்கு மறைந்த திமுக தலைவர் கருணாநிதி ஆதரவு அளித்தார் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

ஆனால், அவருக்குப் பிறகு அரியணை ஏறிய அவருடைய மகனும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் அரசியல் ஆதாயம் கருதி அம்முறையை எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் இருக்கும் எஸ்ஆா்எம் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 5) நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்றபோது அவர் இவ்வாறு பேசினார்.

மேலும், 2034ஆம் ஆண்டுக்கு பிறகே ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ முறை அமலுக்கு வர வாய்ப்புள்ளதாகவும் அதை நடைமுறைப்படுத்துவதன் மூலம் கிட்டத்தட்ட ரூ.12 பில்லியன் நிதியைச் சேமிக்கலாம் எனவும் அவர் சொன்னார். இதன்மூலம் நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சி 1.5 விழுக்காடு உயரும் என்றார் அமைச்சர்.

“நாடெங்கும் நாடாளுமன்றத் தோ்தலை ஒரு முறை நடத்த நாட்டில் சட்ட ஒழுங்கைப் பாதுகாக்க 70 லட்சம் பாதுகாப்புப் படையினரும் தோ்தல் பணிகளுக்காக 25 லட்சம் பேரும் தேவைப்படுகின்றனா்.

“கடந்த 2024 தோ்தலுக்கு கிட்டத்தட்ட ரூ.1000 பில்லியன் செலவானது. அவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு, நாடாளுமன்றத் தோ்தலுடன் மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களையும் இணைத்து நடத்தும் பொருட்டு ‘ஒரேநாடு ஒரே தோ்தல்’ முறையை நடைமுறைக்கு கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது,” என அமைச்சர் தெரிவித்தார்.

கருத்தரங்கில் தமிழக பாஜக முன்னாள் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன், எஸ்ஆா்எம் வேந்தா் பாரிவேந்தா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதற்கிடையே, நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த நிர்மலா சீதாராமனை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுகவின் செங்கோட்டையன் ஆகியோர் சந்தித்ததாகத் தகவல்கள் பரவின. அச்சந்திப்புகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததாகச் சொல்லப்பட்டது.

ஆனால், அவை அனைத்தையும் சீமான் திட்டவட்டமாக மறுத்துள்ளார். “நிதியமைச்சரைச் சந்தித்தால் செய்தியாளர்களிடம் தெரிவிக்கப் போகிறேன். அதில் நான் அச்சப்படுவதற்கோ பயப்படுவதற்கோ எதுவும் இல்லை,” என அவர் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்