சென்னை: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தமிழர் பாரம்பரிய கலைத் திருவிழாக்களை நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் ஆண்டுதோறும் ‘சென்னை சங்கமம் - நம்ம ஊர் திருவிழா’ என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
திமுக எம்பி கனிமொழி கடந்த சில ஆண்டுகளாக இதற்கான ஏற்பாடுகளைச் செய்வதில் முக்கியப் பங்காற்றி வந்தார்.
இந்த ஆண்டுக்கான சென்னை சங்கமம் விழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார் என்றும் இதில் தமிழகத்தின் 250 பிரபலக் கலைஞர்கள் இணைந்து இசை, நடன நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னையில் கடற்கரைகள், பூங்காக்கள் என இருபது இடங்களில் ஜனவரி 15 முதல் 18ஆம் தேதி வரை நான்கு நாள்களுக்குப் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்காக மாநிலம் முழுவதும் இருந்து 1,500ற்கும் மேற்பட்ட கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக மக்கள் விரும்பி உண்ணும் பல உணவு வகைகளைக் கொண்ட அரங்குகளை அமைத்து உணவுத் திருவிழாவும் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

