அமித்ஷா தாக்கல் செய்த மசோதா சர்வாதிகாரத்தையே காட்டுகிறது: ஸ்டாலின்

2 mins read
1bd5dc6c-0f64-414f-b975-f1d39c6bbcb2
முதல்வரோ, பிரதமரோ அல்லது அமைச்சரோ கடுமையான குற்றச்சாட்டுகளில் கைதாகி, 30 நாள்கள் சிறையில் இருந்தால், அவர்களது பதவியைப் பறிக்கும் வகையில் அரசமைப்பு சட்டத்தின் 130வது பிரிவைத் திருத்தம் செய்வதற்கான சட்ட முன்வரைவை நாடாளுமன்றத்தில் அமித்ஷா அறிமுகம் செய்தார். அதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். - படம்: ஊடகம்

சென்னை: பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் ஆகியோர் ஊழல் அல்லது வேறு குற்றச்சாட்டுகளில் தொடர்ச்சியாக 30 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டால் அவர்களைப் பதவி நீக்கம் செய்வதற்கான சட்டத் திருத்தத்திற்கான சட்ட முன்வரைவை (மசோதா) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களையில் தாக்கல் செய்தார்.

அந்த மசோதாவை எதிர்த்து எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தனது கண்டனத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், 130ஆவது அரசியல் சட்டத் திருத்தம் என்பது சீர்திருத்தம் அல்ல. இது ஒரு கறுப்பு நாள். ஒரு கொடுஞ்சட்டம்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை எவ்வித விசாரணையுமின்றி நீதிமன்றத் தீர்ப்புமின்றி பதவி நீக்கம் செய்யலாம்.

பாஜக வைத்ததுதான் சட்டம்

வாக்குகளைத் திருடு, எதிராளிகளின் குரலை நசுக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை ஒடுக்கு என எல்லா கொடுங்கோன்மையும் இப்படித்தான் தொடங்கும்.

மக்களாட்சியின் வேரிலேயே வெந்நீர் ஊற்றும் இத்தகைய திருத்தச் சட்டத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இந்தியாவைச் சர்வாதிகார நாடாக மாற்ற முயலும் இந்த முயற்சிக்கு எதிராக ஜனநாயகச் சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து போராட முன்வர அழைக்கிறேன்.

வாக்குத் திருட்டை திசைதிருப்பும் முயற்சி

வாக்குத் திருட்டு அம்பலப்படுத்தப்பட்ட பிறகு மத்திய பாஜக அரசு அமைத்துள்ள ஆட்சியே கேள்விக்குள்ளாகியுள்ளது.

இப்போதைய பாஜக அரசு சட்டப்பூர்வமானதா என்பதே ஐயம்தான். தில்லுமுல்லுகளின் மூலம் மக்களின் தீர்ப்பைக் களவாடி ஆட்சியில் அமர்ந்துள்ள பாஜக, தற்போது அதில் இருந்து மக்களின் கவனத்தை எப்படியாவது திசைதிருப்ப முயற்சி செய்கிறது. அதற்காகத்தான், இந்த அரசியலமைப்பு (130வது திருத்தம்) சட்டமுன்வரைவு, 2025ஐ கொண்டு வந்துள்ளது என்று திரு ஸ்டாலின் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.

ஒருவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் என்பது அதுசார்ந்த வழக்கைத் தீர விசாரித்த பிறகே தீர்மானிக்கப்படும். வெறுமனே வழக்குப் பதிவதால் அவர் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கிவிட முடியாது என்பதால், இந்தச் சட்டத் திருத்தம் அரசியலமைப்புக்குப் புறம்பானது. இது நீதிமன்றங்களால் ரத்து செய்யப்படும்.

முதலமைச்சர்களாக அமைச்சர்களாக இருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியில் உள்ள மாநிலக் கட்சித் தலைவர்களை, “ஒழுங்காக எங்களுடன் இருங்கள், இல்லையென்றால்…” என்று மிரட்டுவதற்கான தீய நோக்கமும் இதில் உள்ளது.

“எந்தச் சர்வாதிகாரியும் முதலில் செய்வது, தனது எதிராளிகளைக் கைது செய்யவும் பதவிநீக்கவுமான அதிகாரத்தைத் தனக்குத் தானே வழங்கிக் கொள்வதுதான். அதைத்தான் அமித்ஷா தாக்கல் செய்துள்ள சட்டமுன்மொழிவும் காட்டுகிறது,” என்று பதிவிட்டுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலும் அமித்ஷாவின் மசோதாவைச் சாடியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்