சென்னை: சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
அந்த உரையில், 2007ஆம் ஆண்டு மத்திய அரசுடன் இணைந்து மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டப் பணி தொடங்கப்பட்டது. 22 ஆயிரத்து 150 கோடி ரூபாய் மதிப்பில் 54.1 கிலோ மீட்டர் நீளத்தில் ரயில் பாதை அமைக்கும் அந்தத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது.
இப்போது நாள்தோறும் 310 ஆயிரம் மக்களுக்கும் அதிகமானோர் பயனடைந்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, இப்போது 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 118.9 கிலோ மீட்டர் நீளத்திற்கு மூன்று வழித்தட மெட்ரோ ரயில் திட்டம் இரண்டாம் கட்டப் பணிகளைச் செயல்படுத்தி வருகிறோம். இதுவரை 19 ஆயிரத்து 229 கோடி ரூபாய் செலவிடப்பட்டு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன என்றார் முதல்வர் ஸ்டாலின்.
இரண்டாவது கட்டத்திற்கான பணிகளை விரைந்து செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். இப்பணிகளை முடிக்க இலக்கிடப்பட்டுள்ள காலவரையறைக்குள் இந்தப் பணிகளை முடிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசும், அலுவலர்களும் மேற்கொண்டு வருகின்றனர். இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் அனைத்தும் 2027ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொழிற்பேட்டைகள், வணிக வளாகங்கள், குடியிருப்புப் பகுதிகள், கல்வி நிறுவனங்கள் என, அனைத்து துறைகளையும் இணைக்கும் வகையில், நகரின் முக்கிய பொதுப் போக்குவரத்து வசதியாகச் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டம் அமையும்.
மேலும் அவர், மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டம் செயல்படுத்தப்பட்ட அதே முறையில் இரண்டாவது கட்டப் பணிகளும் செயல்படுத்தப்பட வேண்டும் என்று நான் பலமுறை வலியுறுத்திய கோரிக்கையை ஏற்று, அதற்கான ஒப்புதலை அண்மையில் அளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கும் மத்திய அரசுக்கும் முதற்கண் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டம், சென்னையின் வடக்கில் இருந்து தெற்கு, கிழக்கில் இருந்து மேற்கு என மொத்தம் 119 கிலோ மீட்டர் நீளத்துக்கு அமைய உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இரண்டாம் கட்டப் பணிகள் முடிந்து, அது நடைமுறைக்கு வரும் போது, சென்னையின் மொத்த மெட்ரோ ரயில் இணைப்பு துாரம், 173 கி.மீ., ஆக இருக்கும்.
மாதவரம் - சிப்காட், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைப்பாஸ், மாதவரம் - சோளிங்கநல்லூர் என மூன்று வழித் தடங்களில் திட்டம் நிறைவேற்றப்படும். 128 மெட்ரோ நிலையங்கள் அமைய உள்ளன.


