சென்னை: இளையராஜா தான் இசையமைத்த ‘வேலியண்ட்’ (Valiant) எனப் பெயரிடப்பட்ட சிம்ஃபொனி இசையை லண்டனில் மார்ச் 8ஆம் தேதி அரங்கேற்றம் செய்கிறார். இந்தியாவின் முதல் சிம்பொனி இசையமைப்பாளர் என்கிற சாதனையைச் செய்யவுள்ள இளையராஜாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இளையராஜாவின் ஸ்டூடியோவுக்கு நேரில் சென்று அங்கு இளையராஜாவை சந்தித்து நினைவுப்பரிசு வழங்கி சிம்பொனி இசை நிகழ்வுக்கான தன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திரு ஸ்டாலின் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், “இசைஞானி இளையராஜாவுடன் இன்றைய காலைப் பொழுது, ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, வரும் மார்ச் 8ஆம் தேதி லண்டன் மாநகரில் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்தவுள்ளார் நம் மனதிற்கினிய ராஜா. தமிழ்நாட்டின் பெருமிதமான இசைஞானியின் இச்சாதனை முயற்சியை வாழ்த்துவதற்காக இன்று நேரில் சென்றேன்.
அப்போது, தாம் கைப்பட எழுதிய Valiant symphony இசைக்குறிப்புகளை உற்சாகத்துடன் என்னிடம் காட்டி மகிழ்ந்தார். உலகத் தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த இசைமூச்சான இளையராஜாவின் கணக்கற்ற சாதனைகளில் இந்தச் சாதனை ஒரு மணிமகுடமெனத் திகழ வாழ்த்துகிறேன்,” எனப் பதிவிட்டுள்ளார்.