தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக தனித்தீர்மானம்: அனைத்துக் கட்சிகளும் ஆதரவு

2 mins read
728d44ed-6345-414c-b2e8-a51fb4db6214
அரிட்டாபட்டி பாதுகாக்கப்பட்ட மலைப்பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என்று சட்டப் பேரவையில் உறுப்பினர்கள் குரல் எழுப்பினர். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராகத் தமிழகச் சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதற்கு அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.

அரிட்டாபட்டி பாதுகாக்கப்பட்ட மலைப்பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. வரலாற்றுச் சின்னங்களை அழிக்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படுகிறது. சுரங்கம் அமைப்பதற்கு அனுமதிக்கக்கூடாது என்று அப்துல் சமது கூறினார்.

தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை அழிக்கும் முயற்சியில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று எம்எல்ஏ ஈஸ்வரன் கூறினார்.

அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய பாஜக அரசின் சதியை முறியடிப்போம் என்று வேல்முருகன் கூறினார்.

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது வரலாற்றுச் சின்னங்களை அழிக்கும் நோக்கம் கொண்டது என்று சிந்தனைச் செல்வன் கூறினார்.

இதற்கிடையே, மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்க உரிமத்துக்கு கடந்த பத்து மாதங்களாக திமுக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சட்டமன்றத்தில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிரான தனித் தீர்மானம் மீது எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.

“நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் வந்தபோதே திமுக எம்.பி.க்கள் எதிர்த்திருக்கலாம். மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து நூற்றுக்கணக்கான கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில்தான் தமிழக அரசு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாகத் தெரிகிறது,” என்று அவர் கூறினார்.

“மேலும், அங்கு சுரங்கம் அமைந்தால் அப்பகுதியில் உள்ள ஏராளமான கிராமங்கள் பாதிக்கப்படும். குடைவரைக் கோயில், சமணச் சின்னங்கள், தமிழ், பிராமி எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்ட பழைமை நினைவிடமாகவும் பஞ்ச பாண்டவர் கல் படுக்கைகள் இருக்கும் இடமாகவும் தொல்பொருள் ஆய்வுச் சிறப்பிடமாகவும் அரிட்டாபட்டி உள்ளது,” என்று குறிப்பிட்டார்.

“தற்போது தமிழக அரசு எழுதிய கடிதத்தைக் கடந்த பிப்ரவரி மாதமே எழுதியிருக்கலாமே? அப்போது சுரங்க எதிர்ப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு உரிய அழுத்தமும் கொடுக்கவில்லை.

“மாறாக, அப்பகுதி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் செய்த பின்னரே டங்ஸ்டன் சுரங்கத்துக்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கடந்த பத்து மாதங்களாக தமிழக அரசு என்ன செய்தது?” என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்குப் பதிலளித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், “டங்ஸ்டன் திட்டத்தைத் தடுத்தே தீருவோம். ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ஒருவேளை, அனுமதி தரும் நிலை வந்தால் நான் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்,” என்று ஆவேசமாகப் பதிலளித்தார்.

குறிப்புச் சொற்கள்