வீட்டில் சுபகாரியங்கள் நடக்கவிருந்தால் ‘வீட்ல விசேஷங்க’ என்பார்கள். வசிப்பது வாடகை வீடா? சொந்த வீடா? என்பது இங்கே முக்கியமில்லை.
சொந்த வீடு ஒரு மனிதனுக்கு அமைந்துவிட்டால் வீட்டில் நடப்பது மட்டுமல்ல, வீடே விசேஷம்தான்.
உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம். இந்த மூன்றும் மனிதர்களுக்கு அத்தியாவசியம் என ஆதிகாலம் முதல் இன்றைய ஐநா காலம் வரை வலியுறுத்தப்படுகிறது.
சொந்த வீடு இல்லாததால் பட்ட அவமானம், உளவியல் ரீதியாக ஒரு மனிதனைத் துன்புறுத்துகிறது. அதனால் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் கையும் பையும் நிறைந்து வழிகிற அளவுக்கு சம்பாதிப்பவர்கள் தங்களின் அடிப்படைத் தேவைக்கு மீறி தனி வீடுகளையும் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளையும் வாங்கிக் குவிக்கிறார்கள்.
தமிழகத்தில் சொத்து சேர்க்கும் முயற்சியாகவும் குடியிருப்புகளை வாங்கிக் குவிக்கிறார்கள். இதனால் விளைநிலங்கள், கான்கிரீட் காடுகளாக உருமாறிக் கொண்டே வருகிறது.
சில தரப்பினரின் நுகர்வு வெறியால் விலைவாசி உயர்ந்து அடிப்படைத் தேவையாக ஒரு சிறிய வீடுகூட வாங்க முடியாத சமத்துவமற்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் பலர்.
எட்டாக்கனியாக இருக்கும் ‘சொந்த வீடு’ கனவை மிகவும் சிரமப்பட்டு எட்டிப் பிடிக்கிறவர்களும் உண்டு.
ஒரு நாட்டின் குடிமகன், சொந்த வீடு கட்ட ஆசைப்படுகிறான் எனில் அதற்கு அரசாங்கத்தின் உதவியும் தேவையல்லவா?
தொடர்புடைய செய்திகள்
அதைப் புரிந்துகொண்டு இந்திய, தமிழக அரசுகள் நல்ல திட்டங்களை அறிவித்து வருவதாகச் சொல்கிறார்கள் கட்டுமானத்துறையினர்.
‘கலைஞர் கருணாநிதி கனவு இல்லம்’
வீடு கட்டுவது ஒவ்வொரு குடிமகனின் கனவு என்பதை உணர்ந்து ‘கலைஞர் கருணாநிதி கனவு இல்லம்’ திட்டத்தை அறிவித்துள்ளது தமிழக அரசு.
இதேபோல் பிரதமரின் ‘அனைவருக்கும் வீடு’ என்ற திட்டத்தை அறிவித்துள்ளது மத்திய அரசு.
ஏழை மக்களின் சொந்தவீடு எனும் கனவை நனவாக்க புதிதாகக் கட்டப்படும் ஒவ்வொரு வீட்டுக்கும் தலா ரூ.3.5 லட்சம் மானியம் வழங்க முன்வந்துள்ளது தமிழக அரசு.
இதன்படி, 2024-25ஆம் நிதியாண்டில் தமிழகத்தில் மொத்தம் ஒரு லட்சம் புதிய வீடுகளைக் கட்ட திட்டமிட்டுள்ளனர். இதற்காக ரூ.3,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கான்கிரீட் வீடுகளாக மாறும் 8 லட்சம் குடிசைகள்:
குடிசைகள் இல்லா தமிழகம் என்பதே தமிழக அரசின் இலக்கு என்றும் அதன் அடிப்படையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
தமிழக கிராமப்புறங்களில் சுமார் எட்டு லட்சம் குடிசை வீடுகள் உள்ளன. அண்மைய கணக்கெடுப்பின்படி, இது தொடர்பான கூடுதல் விவரங்களைச் சேகரித்த தமிழக அரசு, அடுத்த ஆறு ஆண்டுகளுக்குள் இந்த குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்ற இலக்கு நிர்ணயித்த்துள்ளது.
முதற்கட்டமாக, நடப்பாண்டில் பத்தாயிரம் வீடுகள் கட்டப்படும். ஒவ்வொரு வீடும் 360 சதுர அடியில் இருக்கும் என்றும் சமையலறை, சிறிய வாழும் அறை ஆகியவை அதில் இருக்கும்.
நிதி உதவி மட்டுமல்ல, மக்கள் வீடு கட்டும் செலவைக் குறைக்க ஏதுவாக தமிழக அரசே சிமென்ட், எஃக்குக் கம்பிகள் ஆகியவற்றை அரசு நிறுவனங்களின் மூலம் குறைந்த விலையில் விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வீடும் எந்த அளவுக்கு கட்டப்பட்டுள்ளது என்பதைக் கவனித்து, நான்கு தவணைகளாக வீடு கட்டும் மானியத்தைப் பயனாளியின் வங்கிக்கணக்கில் நேரடியாகச் செலுத்துகின்றனர்.
தமிழக அரசு 40%, மத்திய அரசு 60%
இந்திய அரசு, பிரதமரின் பெயரிலான வீடுகட்டும் திட்டத்தைக் கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கியது. ஏழை, நடுத்தரக் குடும்பங்களுக்கு இந்த திட்டத்தின்கீழ் அடுத்த ஐந்தாண்டுகளில் ஒரு கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.
முதற்கட்டமாக, 1.18 கோடி வீடுகளுக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அவற்றுள் 85.5 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு, பகுதியாக பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுவிட்டன.
நகர்ப்புறங்களைச் சேர்ந்த தகுதியான பயனாளிகளுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய வீடுகளை வழங்குவதே மத்திய அரசின் நோக்கம் என்கிறார் பிரதமர் மோடி.
தற்போது பிரதமர் வீட்டு வசதி திட்டம் 2.0 மூலம், ஒவ்வொரு வீட்டுக்கும் 2.30 லட்சம் மானியம் வழங்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது.
இவற்றுள் நடப்பு நிதியாண்டில் தமிழகத்தில் மட்டும் 68,569 வீடுகளை கட்ட மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதற்காக, தமிழக அரசு ரூ.209 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. திட்டங்களின் பெயர்கள் மாறுபட்டாலும், அவற்றின் நோக்கம் ஏழைகளுக்குச் சொந்த வீடு கிடைக்க வேண்டும் என்பதுதான்.
மொத்தத்தில், வீடு கட்டும் திட்டத்துக்கு வழங்கப்படும் மானியத்தில் தமிழக அரசு 40 விழுக்காடு, மத்திய அரசு 60 விழுக்காடு ஏற்றுக் கொள்கின்றன.
‘வறுமை ஒழிப்பு’ என்பதே இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம்
வழக்கம்போல் மத்திய அரசின் நலத்திட்டங்களைப் பாரபட்சமின்றி செயல்படுத்தும் ஒருசில மாநிலங்களில் தமிழகம் முன்னணியில் உள்ளது.
ஏற்கெனவே மூன்று கோடி வீடுகள் கட்டி முடிக்க இந்திய அரசு இலக்கு நிர்ணயித்து இருந்த நிலையில், தற்போது நகர்ப்புறப் பகுதிகளில் கூடுதலாக மேலும் மூன்று கோடி வீடுகளை கட்ட நிதி அறிக்கையில் போதுமான அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சிறு வணிகர்கள், சுயதொழில் செய்பவர்களும்கூட அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கலாம் என்றும் மத்திய அரசு மேலும் கூறியுள்ளது.
கொரோனா காலகட்டத்தில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த இயலாமல் அவை முடங்கிப்போயின. எனினும் அனைவருக்கும் வீடு என்ற திட்டம் மட்டும் சவால்களை கடந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
“மூன்று கோடி வீடுகள் என்ற இலக்கை நெருங்கிவிட்டோம். குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் ஏற்படும் தேவையை ஈடுகட்ட அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும் மூன்று கோடி வீடுகள் கட்டப்படும்,” என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
மத்திய, மாநில அரசுகளின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் மானியம் பெற இணையம் மூலம் விண்ணப்பித்தாலே போதுமானது. விண்ணப்ப நடைமுறை எளிமையாக உள்ளது.
‘வறுமை ஒழிப்பு’ என்பதே இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். கடனைச் திருப்பிச் செலுத்த 20 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படுவதுடன், வட்டி விகிதமும் மிகக்குறைவு. சொந்த வீடு என்பது இனியும் தமிழர்களுக்கு (இந்தியர்களுக்கு) கனவல்ல.