ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் மாநிலம் தழுவிய போராட்டம்

2 mins read
0900d1f2-4a1c-42dc-b7ed-d786cbe7c59b
அகவிலைப்படியை உயர்த்த நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்துக் கழகத்தின் ஓய்வூதியர்கள் சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் போராட்டத்தில் குதித்தனர். - படம்: ஊடகம்

சென்னை: தமிழகம் முழுதும் பல நகரங்களில் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“மாநில அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.7,850 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஆனால், போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு ரூ.3,050 என்பதே குறைந்தபட்ச ஓய்வூதியமாக இருக்கிறது. இவ்வாறு முப்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் குறைந்தபட்ச ஓய்வூதியம் பெறுகின்றனர். அவர்களுக்கும், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கும் மருத்துவப் படியும் வழங்கப்படுவதில்லை. இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகாண உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பொதுச்செயலாளர் கே.கர்சன் கூறினார்.

எனவே, ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை, பல்லவன் சாலையில் காலையில் இருந்தே நூற்றுக்கணக்கான போக்குவரத்துத்துறை ஓய்வூதியர்கள் திரண்டனர். அங்குள்ள மாநகர போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில் இருந்து அவர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.

அப்போது, அகவிலைப்படி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு முதல்வரை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து சாலை இறுதி வரை வந்த அவர்களை காவல்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அப்போது காவலர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் சாலையில் ஓய்வூதியர்கள் அமர்ந்து குந்தியிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, சாலையின் மறுபுறத்துக்குச் சென்ற போராட்டக்காரர்கள் பேருந்துகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாக மறியல் போராட்டம் நீடித்தது. இதனால் போராட்டம் நடந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவலர்கள் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

குறிப்புச் சொற்கள்