குறிஞ்சேரியில் துப்பாக்கியுடன் கூடிய கற்சிலை கண்டெடுப்பு

குறிஞ்சேரியில் துப்பாக்கியுடன் கூடிய கற்சிலை கண்டெடுப்பு

படம்: தினமலர்

20 Sep 2026 - 7:05 pm

1 mins read

உடுமலை: தமிழகத்தின் உடுமலை பகுதிக்கு அருகே உள்ள குறிஞ்சேரியில் துப்பாக்கியுடன் கூடிய கற்சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அம்மன் கோவில் வளாகத்தில் துப்பாக்கியுடன் காணப்படும் அந்தப் பழைமையான கற்சிலையானது, உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினரால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

பாளையக்காரர் காலத்தைச் சேர்ந்த அச்சிலை, தளி எத்தலப்ப மன்னர் காலத்துடன் பொருந்துவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

16ஆம் நூற்றாண்டின் இறுதியில் தளி எத்தலப்ப மன்னரின் முன்னோர்கள் முதன்முதலில் குறிஞ்சேரியில் வந்து தங்கியதாக ஆங்கிலேயரின் வருவாய்த்துறை ஆவணங்கள் கூறுகின்றன.

தளி எத்தலப்ப மன்னரின் கட்டுப்பாட்டில் இருந்த தளிஞ்சி பகுதியில் துப்பாக்கி தொழிற்சாலை இருந்துள்ளது.

திருமூர்த்தி மலை, ஜிலோப்ப நாயக்கன்பாளையம், பண்ணக்கிணறு, நல்லாம்பள்ளி போன்ற பகுதிகளில் வலது கையில் துப்பாக்கி, இடது கையில் குறுவாள், இடுப்பில் குத்துவாளுடன் இருக்கும் ஆண் கற்சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

காரத்தொழுவு அழகுநாச்சியம்மன் கோவிலிலும் ஒரு பெண் துப்பாக்கி வைத்திருப்பது போன்ற கற்சிலை இருந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்