தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழகத் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

2 mins read
bdb14d03-d6bc-49c1-8e00-94861a541c2b
டானா புயல் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று தமிழ் நாடு வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: சென்னை உட்பட தமிழகத்தில் 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை மத்தியகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. அது செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 22) அதிகாலையில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதன்கிழமை (அக்டோபர் 23) புயலாக வலுப்பெறக்கூடும். பின்னர், அது வடமேற்கு திசையில் நகர்ந்து, 24ஆம் தேதி காலை வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள், ஒடிசா–மேற்கு வங்கக் கடற்கரை பகுதிகளை அடையக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதையடுத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், தூத்துக்குடி, கடலூர், நாகை, மற்றும் பாம்பனில் உள்ள துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை டானா புயலாக வலுப்பெறும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தப் புயலுக்கு கத்தார் பரிந்துரைத்தபடி டானா எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் புயல் வியாழக்கிழமை இரவு மற்றும் வெள்ளிக்கிழமை தீவிர புயலாக ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் கரையைக் கடக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. இந்த டானா புயலால் தமிழகத்திற்குப் பாதிப்பு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் காற்றின் தாக்கம் கடலோரப் பகுதிகளில் இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அந்தமான் கடல் பகுதிகளில் காற்று மணிக்கு 35 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

டானா புயலால் வடக்கு ஆந்திரா, மேற்கு வங்கம், ஒடிசா, பங்ளாதேஷ் ஆகிய மாநிலங்களில் மழைப்பொழிவு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

குறிப்புச் சொற்கள்
புயல்தமிழ் நாடுதுறைமுகம்