சேலம்: இலவசமாக ஆட்டிறைச்சி தர மறுத்த கறிக்கடைக்காரரைத் காவல்துறை உதவி ஆய்வாளர்கள் இருவர் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூக்குத்தி கவுண்டர் என்ற முதியவர் சேலம் அன்னதானப்பட்டிப் பேருந்து நிலையம் அருகே கறிக்கடை வைத்துள்ளார். கடந்த ஞாயிறன்று கடையில் வியாபாரம் செய்துகொண்டிருந்தபோது பாலசுப்பிரமணியம், சிவபெருமான் என்ற இரு போலிஸ் உதவி ஆய்வாளர்களும் அவரிடம் இலவசமாக இரண்டு கிலோ ஆட்டிறைச்சி கேட்டார்களாம்.
ஆனால், காசில்லாமல் கறி தர முடியாது என மூக்குத்தி கவுண்டர் மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த போலிஸ் அதிகாரிகள் அம்முதியவரைக் கண்டபடி வசை பாடியதுடன், அவரையும் அவரின் மனைவி ராமாயி, மகன் விஜயகுமார் ஆகியோரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் விஜயகுமாரின் காதிலிருந்து ரத்தம் வந்ததாகக் கூறப்பட்டது.
இதைக் கேள்விப்பட்ட சேலம் மாநகர போலிஸ் ஆணையர் கே.சங்கர், அவ்விரு அதிகாரிகளையும் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்குப் பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டார். அத்துடன், தனது தவற்றுக்காக போலிஸ் அதிகாரி பாலசுப்பிரமணியன், திருமதி ராமாயியிடம் கைகூப்பி மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
இச்சம்பவம் குறித்த காணொளி வாட்ஸ்அப்பில் வேகமாகப் பரவி வருகிறது.

