சென்னை: எதிர்வரும் 2023ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தை புதிய தொழில் முனைவோருக்கான, உலக அளவில் மிகச் சிறந்ததோர் விடமாக உருவாக்குவது தான் 'தமிழ்நாடு புத் தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை'யின் நோக்கம் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். இந்தக் கொள்கையின் மூலம் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிட்டும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் 'தமிழ் நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை 2018=-2023' என்ற புத்தகத்தை வெளியிட்ட அவர், நாட்டிலேயே மிகப் பெரிய அறிவுசார் மூலதனம் மற்றும் கண்டுபிடிப்புகளின் மையமாக தமிழகத்தை மாற்றுவதற்கும் இந்த புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கை வழிவகுக்கும் என்றார்.
"தமிழகத்தில் குறைந்த பட்சம் 5 ஆயிரம் தொழில்நுட்பம் சார்ந்த புத்தொழில் களை உருவாக்கிட தேவையான ஆக்கமும் ஊக்கமும் அளிக்கப்படும். துப்புரவு, உணவு, பசுமை ஆற்றல், சுகாதாரம், கல்வி போன்ற துறைகளில் உள்ள பிரச்சினைகளுக்கு புதுமையான தொழில்நுட்பம் சார்ந்த தீர்வு காணும் வகையில், குறைந்தபட்சம் 10 உலகளாவிய உயர் வளர்ச்சிக்கான புத்தொழில்களுக்கு ஆதரவு அளிக்கப்படும்," என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள புத்தொழில்களில் முதலீடு செய்ய நாட்டின் பிற பகுதி கள் மற்றும் உலக அளவில் உள்ள சிறந்த முதலீட்டாளர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள் என்றும் முதல்வர் மேலும் குறிப்பிட்டார்.

