2,000 காளைகளுடன் களைகட்டிய விராலிமலை ஜல்லிக்கட்டு

2,000 காளைகளுடன் களைகட்டிய விராலிமலை ஜல்லிக்கட்டு

1 mins read

விராலிமலை: உலக சாதனை முயற்சியாக விராலிமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி யில் 2 ஆயிரம் காளைகள் பங்கேற்றன. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஜல்லிக்கட்டை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். காலை 8 மணியளவில் முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் பன்னீர்செல்வமும் ஜல்லிக்கட்டுப் போட்டியை தொடங்கி வைத்தனர். இதையடுத்து 2 ஆயிரம் காளைகள் வரிசையாக களமிறக்கப்பட்டன. அவற்றை அடக்க நூற்றுக்கணக்கான மாடு பிடி வீரர்கள் தைரியமாக முயற்சி மேற்கொண்டனர்.

தமிழகத்தில் இதுவரை நடை பெற்ற பல்வேறு ஜல்லிக்கட்டுப் போட்டிகளைவிட விராலிமலை ஜல்லிக்கட்டில் அதிக எண்ணிக்கையில் காளைகளும் மாடுபிடி வீரர்களும் பங்கேற்றதால் இந் நிகழ்வை உலக சாதனைப் பட்டியலில் இடம்பெறச் செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 518 வாடிவாசல்கள் உள்ள தாகவும் வேறெந்த மாவட்டத்திலும் இதுபோன்ற ஜல்லிக்கட்டு நிகழ்வுக்கான வாடிவாசல்கள் இந்த எண்ணிக்கையில் இல்லை என்றும் ஏற்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்தனர். இந்தச் சாதனை நிகழ்வு குறித்த தகவல்களைப் பதிவு செய்ய லண்டனில் இருந்து இருவர் கின்னஸ் பிரதிநிதிகளாக வந்திருந்தனர்.