தந்தை, மகனைத் தாக்கிய போலிஸ் அதிகாரிகளுக்கு ரூ.4 லட்சம் அபராதம்

சென்னை: தந்தை, மகனைத் தாக்கிக் கொடுமைப்படுத்திய  காவல்துறை அதிகாரிகளுக்கு ரூ.4 லட்சம் அபராதத்தை மனித உரிமை ஆணையம் விதித்துள்ளது.
போரூரில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் நடந்த மோசடிகள் குறித்துப் புகார் செய்து வந்த அம்பிகா கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அம்பிகாவின் கணவர் ரவியையும் அவர்களுடைய மகனையும் மாங்காடு காவல்துறையினர் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது காவல்துறையினர் தன்னையும், மகனையும் சட்டவிரோதமாக அடைத்து வைத்ததுடன் சித்திரவதையும் செய்ததாக மாநில மனித உரிமை ஆணையத்தில் ரவி புகாரளித்தார். கொலைக் குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி மிரட்டியதாகவும் ரவி குறிப்பிட்டார். 2012ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி முதல் பிப்ரவரி 4ஆம் தேதி வரை காவல்துறை நிலையத்தில் சித்திரவதை அனுபவித்ததாகக் கூறப்பட்டது. அதன்பின் உறவினர்கள் கேட்டுக்கொண்டதால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டபோதும் இந்தக் குற்றச்சாட்டு போலிசாரால் மறுக்கப்பட்டு வருகிறது.