எரிவாயுக் கசிவால் தீ விபத்து;  தாயும் இரு குழந்தைகளும் பலி

விராலிமலை: புதுக்கோட்டை அருகே எரிவாயு கலன் கசி வால் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு பெண்ணும் அவரின் இரு குழந்தைகளும் உயிரிழந்தனர்.
இம்மாதம் 17ஆம் தேதியன்று புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ராப்பூசல் தொட்டியப்பட்டியைச் சேர்ந்த பொன்னுமணி, 28, சமையல் செய்துகொண்டிருந்தார். அவருடைய 3 வயது மகனும் 2 வயது மகளும் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென எரிவாயு கலனில் ஏற்பட்ட கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. மூவரும் வீட்டிலிருந்து வெளியேற முடியாத நிலையில் வீடு முழுவதும் பரவிய தீ மூவர் மீதும் பற்றிக்கொண்டது. அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று தீயை அணைத்து 3 பேரையும் சிகிச்சைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை மூவரும் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.