முதல்வர் பதவி விலகக் கோரி நாளை திமுக ஆர்ப்பாட்டம்

சென்னை: கோடநாடு விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாளை 24ஆம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “கோட நாடு விவகாரத்தில் ஒரு கொலை நடந்ததோடு மூன்று பேர் விபத்தில் கொல்லப்பட்டனர். ஒருவர் மீது கொலைமுயற்சி மேற்கொள்ளப்பட்டு அவர் தப்பியுள்ளார். ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். 
“இவை அனைத்துமே முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச் சாட்டாக வைக்கப்படுகிறது. எனவே அவர் உடனடியாக முதல்வர் பதவியிலிருந்து விலகவேண்டும் என்றும் முதல்வர் மீது அரசியல் சட்டப்படி ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நேர்மையான ஐஜி தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக்குழுவை ஏற்படுத்தி மேல்விசாரணை நடத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டு மெனவும் வலியுறுத்தி நாளை காலை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெறும்,” என தெரிவித்துள்ளார்.