'பாஜகவுடன் அதிமுக கூட்டணி என்பது ராம்தாஸ் அத்வாலேயின் தனிப்பட்ட கருத்து'

சென்னை: வரும் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் அதிமுக  கூட்டாகப் போட்டியிடும் என்ற ராம்தாஸ் அத்வாலே கூறிய கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்தாகும் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தற்போது பாஜக கூட்டணியில் அங்கம் வகித்து வரும், மகாராஷ்டிர மாநிலத்தின் இந்திய குடியரசுக் கட்சியின் தலைவரும் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜகவும் அதிமுகவும் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்திக்கும். திமுக அதிக கட்சிகளுடன் இணைந்து கூட்டணி வைக்கிறது.
“அதனால், தமிழக மக்களுக் காக ஜெயலலிதா கண்ட கனவுகளை நிறைவேற்ற தினகரன் அதிமுவுடன் இணைய வேண்டும். தினகரன் வருகின்ற நாடாளு மன்றத் தேர்தலை அதிமுகவோடு இணைந்து சந்திக்க வேண்டும்.  ஓபிஎஸ் - இபிஎஸ் இணைந்தது போன்று இரு அணிகளும் இணைய வேண்டும் என்பது தொடர்பாக தினகரனை சந்தித்து வலியுறுத்த உள்ளேன். இணைந்த இரு அணிகளும் பாஜக கூட்டணியில் வரும் மக்களவைத் தேர்தலைச் சந்திக்கும்” என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “பாஜகவும் அதிமுகவும் மிகப் பெரிய இயக்கங்கள். 
கூட்டணி குறித்த முடிவுகளைக் கட்சித் தலைமையே அறிவிக்க வேண்டும். தனிப்பட்ட அமைச்சர் ஒருவர் சொல்வதை கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அது அவருடைய தனிப்பட்ட கருத்து,” எனக் கூறினார்.