மோப்பநாய்க்கு பிறந்தநாள் கொண்டாடிய வனத்துறையினர் 

நீலகிரி மாவட்டத்தில் வனத்துறையினரின் வலதுகரமாக இருந்து  பல குற்றச்செயல்களைத் தடுக்க உதவிய மோப்பநாய் ஆபருக்கு பாட்டுப் பாடி, பிறந்தநாள் கேக் வெட்டி, அதை அன்போடு ஊட்டிவிட்டனர் முதுமலை வனத்துறை அதிகாரிகள். படம்: ஊடகம்

கூடலூர்:  குற்றவாளிகளையும் குற்றச்செயல்களையும் தனது அபூர்வ மோப்பத் திறனால்  கண்டுபிடித்து வனத்துறையின ருக்கு உறுதுணையாக இருந்து வரும் ஆபர் என்ற மோப்பநாயின் 4வது பிறந்தநாள் விழா நேற்று முதுமலைப் புலிகள் காப்பகத்தில் கேக் வெட்டி சிறப்பாகக் கொண் டாடப்பட்டது.
 நீலகிரி மாவட்டம், முதுமலைப் புலிகள் காப்பகத்தில் பணிபுரியும் ஆபர்,  சத்தியமங்கலம் வனப்பகுதி யில் இறந்த புலியின் தோலைப் பதுக்கிய இடத்தைக் கண்டுபிடித்த தோடு, கூடலூரில் காணாமல் போன யானைத் தந்தத்தை மைசூ ரில் கண்டுபிடித்தது.
மசினகுடி வனப்பகுதியில் காணாமல்போன மனவளர்ச்சி குன்றிய நபரை கண்டுபிடித்தது. கோவையில் சந்தனக் கட்டைகள் பதுக்கப்பட்டிருந்த இடத்தையும்  இது கண்டுபிடிக்க உதவியுள்ளது.