500 லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிக்கு 5 ஆண்டு சிறை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள ராதாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீராசாமி. இவர் கடந்த 2008ஆம் ஆண்டு மின் இணைப்பு வழங்கக் கோரி மதுரபாக்கத்தில் உள்ள துணைமின்நிலையத்தில் பணிபுரியும் உதவி செயற்பொறியாளர் திருஞானசம்பந்தத்திடம் விண்ணப்ப மனு கொடுத்திருந்தார்.
அப்போது அவர் ரூ.500 லஞ்சம் தரவேண்டும் என்று கூறினார். லஞ்ச பணம் கொடுக்க விரும்பாத வீராசாமி விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலிசில் புகார் செய்தார். காவல்துறையினரின் அறிவுரைப்படி வீராசாமி லஞ்சப் பணத்தை ரூ.500 மின்வாரிய அதிகாரி திருஞானசம்பந்தத்திடம் வழங்கினார். 
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்சஒழிப்பு காவல்துறையினர் திருஞானசம்பந்தத்தை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவின் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.
நீதிபதி பிரியா வழக்கை விசாரித்தார். லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி திருஞானசம்பந்தத்துக்கு ஐந்தாண்டுச் சிறைத் தண்டனையும் ஐயாயிரம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.