அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 8 தொகுதிகள்

அதிமுக=பாஜக இடையே கூட்டணி அமைப்பதற்கான பணிகள் பெரும்பாலும் முடி­வடைந்துவிட்டதாக இரு கட்சி­களின் வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
கூட்டணி, தொகுதிப் பங்கீடு, பிரசாரம், தேர்தல் அறிக்கை ஆகியன குறித்து விவாதிப்ப­தற்காக அதிமுக, பாஜக உயர்­ மட்டக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் அவை குறிப்­ பிட்டன.
இவ்விரண்டு கட்சிகளின் குழுக்களும் நேற்று முதல் தங்களது பணியைத் தொடங்கின என்று அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவித்தன.
எல்லாம் முடிவான பின்னர் வரும் 10ஆம் தேதிக்குப் பின்னர் கூட்டணி குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளியிடப்படும் என்று தெரிகிறது.
கூட்டணி அமைப்பது குறித்து பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவுடன் தமிழக முதல் அமைச்சரின் நம்பிக்கையைப் பெற்ற அமைச்சர்களான எஸ்பி வேலுமணி, பி தங்கமணி ஆகி­யோர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிகிறது. இதன் இடையாளராக மத்திய தற்காப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் செயல்பட்டு வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அண்மைக்காலமாக திருமதி நிர்மலா அடிக்கடி தமிழகம் வந்து செல்வது குறிப்பிடத்தக்கது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி குறிப்பிட்டுள்ளது.
இந்தக் கூட்டணியில் பாமக, விஜயகாந்தின் தேமுதிக, ஜிகே வாசனின் தமாகா, கிருஷ்ண­சாமியின் புதிய தமிழகம் போன்ற­ வையும் இடம்பெறுவதற்கான சாத்தியம் உள்ளது. 
தொகுதிப் பங்கீட்டில் இக்கட்சி­களைச் சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகின்­ றன.
இப்போதைய நிலவரப்படி மொத்தமுள்ள 39 தொகுதி­களில் அதிமுக 24 அல்லது 25 தொகுதிகளிலும் பாஜக 8 தொகுதிகளிலும் போட்டியிட முடிவாகி உள்ளது. 
பாமக 3 அல்லது 4, தேமுதிக 3, புதிய தமிழகம் 1 என தொகுதிப் பங்கீட்டுப் பேச்சு­வார்த்தை தொடர்கிறது.
பாஜக கூட்டணியில் ஏற்கெனவே அங்கம் வகிக்கும் கல்வியாளர் பச்சமுத்துவின் இந்திய ஜனநாயகக் கட்சி, தேவநாதன் தலைமையிலான இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் போன்றவை பாஜகவின் எட்டு தொகுதி­களைப் பங்கிட்டுக்கொள்வ­ தோடு தாமரைச் சின்னத்தில் போட்டியிடும்.
பாஜக கூட்டணி குறித்து தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் கோடிகாட்டினார். 
“தேசிய அளவிலும் மாநில அளவிலும் அதிமுகவின் கருத்தோடு ஒத்துப்போகக்­கூடிய கட்சிகளோடு நாடாளு­ மன்றத் தேர்தல் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. 
“அவை எந்தெந்தக் கட்சிகள் என்று இப்போது தெரிவிக்க இயலாது. எத்தனை கட்சிகள் இருந்தாலும் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை வகிக்கும்,” என்று அவர் கூறி இருந்தார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்­கான திமுக கூட்டணி ஓரளவு உறுதியாக எந்தெந்தக் கட்சிகள் அதில் இடம்பெறும் என செய்திகள் வெளிவந்து­கொண்டி ருக்கும் நிலையில், அதிமுக யாருடன் கூட்டுச் சேரப்போகிறது என்று பரவலாகக் கேட்கப்பட்டு வந்தது.
அந்தக் கேள்விக்கு விடை அளிக்கும் வகையில் பாஜக­வுடன் இணைந்து அக்கட்சி போட்டியிட உள்ளதாக பிரபல ஆங்கில நாளிதழ்கள் தெரி­வித்து வருகின்றன. 
இந்நிலையில், தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் நேற்று முதல் விருப்ப மனுக்­களை அதிமுக தலைமையகம் பெறத் தொடங்கி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.