அதிமுக -  பாஜக கூட்டணியில் இழுபறி 

இந்தியாவில் விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியும் எப்படியும் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்ற துடிப்பில் காங்கிரஸ் கட்சியும் கடுமையான போட்டியை எதிர்நோக்குகின்றன.
இந்தத் தேர்தலில் தென்மாநிலங்கள், குறிப்பாக 39 இடங்களைக் கொண்ட தமிழ் நாட்டின் மீது இரு பெரும் கட்சிகளுமே அக்கறையாக உள்ளன. ஆட்சி அமைப்பது தமிழகத்தின் வாக்காளர்கள் கைகளில் ஓரளவு தங்கி உள்ளது என்பதால், தமிழகத்தின் முடிவுகளை தங்களுக்குச் சாதமாக்கும் சாணக்கிய  உத்திகளை அவை கையாண்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, மக்கள் மய்யம், தினகரன் கட்சி என நான்குமுனைப் போட்டி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இரு கம்யூனிஸ்டு கட்சிகள் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஓரளவு உறுதியாகிவிட்டது. 
தமிழகத்தின் 39 இடங்கள், புதுச்சேரி 1 என 40 இடங்களிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று கமல்ஹாசன் நேற்று அறிவித்திருக்கிறார்.
டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் தனித்தே போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
திமுக, அதிமுக கூட்டணிகளுடன் தினகரன் இணைவதற்கான வாய்ப்புகள் தெரியவில்லை. கமலுடனும் தினகரனுக்கு அணுக்கமில்லை. அதனால், அமமுக தனித்தே நிற்கும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் பாஜக - அதிமுக கூட் டணிதான் இன்னமும் இழுத்துப் பறித்துக் கொண்டிக்கிறது. 
எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்த திமுக வின் பெரும் கூட்டணிக்குப் போட்டியாக, அதிமுக பாமக, தேமுதிக, சமக, புதிய தமிழகம், ஐஜேகே ஆகியவற்றை இணைத்து மற்றொரு பெரும் கூட்டணியை அமைப்பதில் பாஜக முனைந்து வருகிறது. ஆனால், தொகுதிப் பங்கீட்டில் சமரசம் காண்பதில் சுமூகமாக தீர்வு இதுவரையில் ஏற்படவில்லை என கட்சித் தகவல்கள் கூறுகின்றன.