கோவை கோயிலிலிருந்த ஐம்பொன் சிலை காணவில்லை

கோவை: கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோயிலில் இருந்த சிலை ஒன்று காணாமல் போய்விட்டது.
இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இந்தக் கோயிலில் ஓரடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன அம்மன் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது.
நேற்று காலை அவ்வழியாக சென்றவர்கள் கோயிலில் சாமி சிலை இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
கோயில் உண்டியலும் உடைக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து உடனே ரேஸ் கோர்ஸ் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் விசாரணையை முடுக்கிவிட்டனர்.
கோயிலில் நள்ளிரவில் புகுந்த மர்ம ஆசாமிகள் சிலையைத் திருடிச் சென்றுள்ளனர்.  உண்டி யலை உடைத்துக் காணிக்கை பணத்தையும் அவர்கள் திருடி சென்றுள்ளனர்.
இந்த நிலையில் சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்கள் வந்து ஆய்வு செய்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.
கோயிலில் கடந்த சில நாட்களாக திருப்பணிகள் நடந்து வரும் நிலையில் சிலை திருடப் பட்டுள்ளது.
இதற்கிடையே ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள முருகன் சிலை திருடப்பட்ட விவகாரத்தில் தலை மறைவாக இருந்த ஆசாமியை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் சென்னையில் கைது செய்துள்ளனர்.
சென்னை கிண்டி அருகே ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள இரும்புப் பட்டறை ஒன்றில் தொன்மையான ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள முருகன் சிலை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கடந்த டிசம்பர் 22ஆம் தேதி தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரி ஏ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த விலை மதிப்பு மிக்க தொன்மையான முருகன் சிலையைக் காவல்துறை யினர் மீட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பில் ஏற்கெனவே சிவக்குமார், இஸ் மாயில் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாக இருந்த முகேஷை நேற்று முன்தினம் காவல்துறை யினர் கைது செய்துள்ளனர்.

Loading...
Load next