நாட்டின் முதல் பெண்; சாதி, மதம் இல்லை என்று கூறி சான்றிதழ் பெற்ற சினேகா

வழக்கறிஞர் சினேகா பார்த்திப ராஜா, வயது 34

வேலூர்: தமக்கு சாதி, மதம் ஏதுமில்லை என்று தெரிவித்து, அவற்றைப் பற்றி எந்த விவரமும் குறிப்பிடாமல் வருவாய்த் துறை யிடமிருந்து தனக்குரிய சான்றிதழைப் பெற்றுள்ளார் சினேகா பார்த்திப ராஜா என்ற பெண். 
வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் இவருக்கு 34 வயதாகிறது. கணவருடன் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் வசிக்கிறார். 
இந்நிலையில் சட்டப்படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், தான் சாதி, மதம் அற்றவர் எனக் குறிப்பிட்டு வருவாய்த் துறை யிடம் இருந்து அண்மையில் சான்றிதழ் பெற்றார். 
இதையடுத்து நாட்டிலேயே இவ்வாறு சான்றிதழ் பெற்ற முதல் பெண் என்ற பெருமை அவருக்குக் கிடைத்துள்ளது. 

அவரது இந்தச் செயல்பாட் டுக்காக பல்வேறு தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். சுமார் 10 ஆண்டுகள் பலவிதமாகப் போராடி இந்தச் சான்றிதழைப் பெற்றதாகக் குறிப்பிடும் சினேகாவின் கணவர் பார்த்திப ராஜா, தங்களது மூன்று பெண் குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்கும்போது சாதி, மதம் அற்றவர்கள் என்று குறிப்பிட்டே சேர்த்திருப்பதாகக் கூறுகிறார். 

இதற்கிடையே அரசாணையில் உள்ள விதிமுறைகளின்படியே சினேகாவுக்குச் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவரது மூதாதையர்களும் சாதி, மதமற்றவர்கள் என்பதற்கான ஆவணங்களை சினேகா வழங்கியதாகவும் திருப்பத்தூர் வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.