அதிமுக எம்பி மீது தாக்கு: திருச்சியில் பதற்றம்

திருச்சி: அதிமுக எம்பி குமார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக திருச்சியில் பதற்றம் நிலவியது. 
பொன்மலை பகுதியில் பேருந்து நிலையம் கட்டுவது தொடர்பாக அதிமுக-திமுகவினர் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. முதற்கட்டமாக பழைய பேருந்து நிலையத்தை இடிக்கும் பணி நேற்று தொடங்கியது. 
எனினும் அக்குறிப்பிட்ட இடம் ரயில்வே துறைக்குச் சொந்தமானது என்பதால் உரிய அனுமதியைப் பெற்ற பிறகே பழைய பேருந்து நிலையத்தை இடிக்கமுடியும் என அதிகாரிகள் விதிமுறைகளைச் சுட்டிக் காட்டினர். 
ரயில்வே துறைக்கு திமுகவினர்தான் தகவல் கொடுத்ததாக ஒரு தரப்புத் தெரிவிக்கிறது. இதனால் தான் கட்டட இடிப்பு பணி தடைபட்டதாக ஆவேச மடைந்த அதிமுகவினர் அங்கு திரண்டிருந்த திமுகவினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அது பின்னர் கைகலப்பாக மாறியது. 
இச்சமயம் அங்கு வந்த எம்.பி. குமார் கடுமையாகத் தாக்கப்பட்டார். அங்கிருந்த திமுக வட்ட அலுவலகம் மீதும் சிலர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்துப் போலிசார் விரைந்து வந்து நிலைமையைக் கட்டுக்குள்  கொண்டு வந்தனர். மீண்டும் மோதல் வெடிக்கக்கூடும் என்ப தால் பொன்மலை பகுதி முழுவதும் தற்போது காவல்துறையின் கண் காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.